ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: அரையிறுதியில் ஃபெடரர்
By DIN | Published on : 16th November 2017 12:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
லண்டனில் நடைபெற்றுவரும் ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் புதன்கிழமை அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் தரவரிசையில் முதல் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பிரிவுகளாக 8 வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுடன் தலா ஒரு முறை ஒவ்வொரு வீரரும் மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் தங்களது பிரிவில் முதல் இரு இடங்களுக்குள் வரும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர்.
முன்னதாக, புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடம் வகிக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை, போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஃபெடரர் எதிர்கொண்டார். இதில் 7-6 (6) , 5-7, 6-1 என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 'டை-பிரேக்' வரை ஆட்டம் சென்றது. இருப்பினும், முதல் செட்டை 7-6 (6) என்ற கணக்கில் ஃபெடரர் கைப்பற்றினார்.
அதன்பிறகு, சுதாரித்துக் கொண்ட ஸ்வெரேவ் இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டம் சூடு பிடித்தது. எனினும், மிக எளிதில் 6-1 என்ற கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஃபெடரர் அந்த செட்டை கைப்பற்றினார்.
இத்துடன் ஃபெடரர்-ஸ்வெரேவ் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், இருவரும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
ஃபெடரர் லீக் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில், குரோஷியாவின் மரின் சிலிச்சை வியாழக்கிழமை எதிர்கொள்கிறார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், ஸ்வெரேவை பாராட்டியதாவது:
ஸ்வெரேவின் ஆட்டம் எனக்கு பிடித்திருக்கிறது. டென்னிஸ் விளையாட்டின் எதிர்கால சாதனைகளுக்கு உரியவராக ஸ்வெரேவை காண்கிறேன். இப்போது, அவருக்கு வெற்றி தேவையான ஒன்றுதான். ரோம், மான்ட்ரியால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் மாபெரும் வெற்றி பெற்றார்.
அந்த வெற்றிகள் அவரை இந்த சீசனில் பாதுகாக்கும். 23, 24 வயதில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை காண ஆர்வமாக இருக்கிறேன் என்றார் ஃபெடரர்.
இதற்கு முன்பு மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டி இறுதிச்சுற்றில், ஸ்வெரேவ், ஃபெடரரை வீழ்த்தி சாம்யியன் பட்டம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.