இந்திய அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா விடுவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இஷாந்த் ஷர்மா திடீரென வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இந்திய அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா விடுவிப்பு

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா இடம்பிடித்துள்ளார். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்கவில்லை. 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை துவங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இலங்கை தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் 6 ஓவர்களை வீசி ரன்களே வழங்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புஜாரா 8 ரன்கள் மற்றும் ரஹானே ரன் கணக்கை துவங்காமல் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில்,  வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மஹாராஷ்டிராவுக்கு எதிராக நடைபெறவுள்ள ரஞ்சி கோப்பை போட்டியில் தில்லி அணிக்காக இஷாந்த் விளையாடவுள்ளார்.

நடப்பு ரஞ்சி சீசனில் தில்லி அணி கேப்டனாக இஷாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இப்போட்டி முடிந்தவுடன் நவம்பர் 24-ந் தேதி நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு இஷாந்த் ஷர்மா மீண்டும் திரும்புகிறார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com