Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - மழையால் ஆட்டம் தாமதம்: முதல் நாளில் இந்தியா தடுமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - மழையால் ஆட்டம் தாமதம்: முதல் நாளில் இந்தியா தடுமாற்றம்

    By DIN  |   Published on : 17th November 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    test

    இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. எஞ்சிய நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 11. 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் 17 ரன்களை எடுத்துள்ளது.
    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், மழை காரணமாக நண்பகலுக்குப் பிறகே தொடங்கியது. முன்னதாக, புதன்கிழமை முதலாக மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    இதனால், வியாழக்கிழமை காலை வரையில் மைதானம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறையத் தொடங்கிய மழை ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றது. இதையடுத்து தார்ப்பாய்கள் விலக்கப்பட்டன. மைதானத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    எனினும், டாஸ் வீசுவதற்கு சிறிது நேரம் முன்பாக மீண்டும் மழை தொடங்கியதையடுத்து, ஆடுகளம் மூடப்பட்டது. நண்பகல் வரையில் மழை தொடர்ந்து பெய்தது.
    இந்தியா பேட்டிங்: இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மழை நின்றதை அடுத்து ஆட்டம் தொடங்கப்பட்டது. குறைவான நேரம் காரணமாக அந்த நாளுக்கான ஓவர்கள் 55-ஆக குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது.
    பேட் செய்ய வந்த இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சுரங்கா லக்மல் வீசிய அந்தப் பந்து ராகுலின் பேட்டில் பட்டு, கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனது. கடந்த 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் கண்ட ராகுல், இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆனார்.
    அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்தார் சேதேஷ்வர் புஜாரா. இந்தியா 13 ரன்களை எட்டிய நிலையில், தொடக்க வீரர்களில் எஞ்சியிருந்த ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார். சுரங்கா லக்மல் வீசிய 6-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் அவர் போல்டாகினார். மொத்தம் 11 பந்துகளை சந்தித்திருந்த தவன் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன்கள் எடுத்திருந்தார்.
    அவரைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி ஆடுகளத்துக்கு வந்தார். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மழையும் பெய்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் சுரங்கா லக்மல் வீசிய 10-ஆவது ஓவரின் முதல் பந்து கோலியின் லெக் பேடில் பட்டதையடுத்து நடுவர் அவுட் வழங்கினார்.
    அதை எதிர்த்து கோலி மேல் முறையீடு (டிஆர்எஸ்) செய்ய, அதிலும் அவர் ஆட்டமிழந்ததாகவே முடிவு வெளியானது. இதையடுத்து 11 பந்துகளை சந்தித்த கோலி ரன்கள் இன்றி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து துணை கேப்டன் ரஹானே களத்துக்கு வர, மழையால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. மழை நீடிக்கவே முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
    இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 8, ரஹானே ரன்கள் இன்றி களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லக்மல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    துளிகள்...
    6 டெஸ்ட் போட்டியில் கோலி டக் அவுட் ஆவது இது 6-ஆவது முறையாகும். கடைசியாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டக் அவுட் ஆகியிருந்தார்.


    2 இலங்கையின் சுரங்கா லக்மல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தியது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த 2010-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயிலை அவர் இவ்வாறு வீழ்த்தியிருந்தார்.


    1 இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை சுரங்கா லக்மல் பெற்றுள்ளார். முன்பு எந்த இலங்கை பந்துவீச்சாளரும் அவ்வாறு விக்கெட் வீழ்த்தியதில்லை.


    3 இந்தியாவில் நடைபெறும் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ரன்கள் கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-ஆவது வீரர் சுரங்கா லக்மல் ஆவார். முதல் வீரராக, ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனாவ்ட் கடந்த 1959-இல் அவ்வாறு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.


    2 டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆவது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இவ்வாறு டக் அவுட் 
    ஆகியிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai