Enable Javscript for better performance
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்- Dinamani

சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்

    By DIN  |   Published on : 17th November 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    leage

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 4-ஆவது சீசன் கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    இந்தியாவில் சமீபத்தில் பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்த நிலையில், அடுத்த கால்பந்து திருவிழா தொடங்குகிறது.
    ஐஎஸ்எல் போட்டியின் நடப்பு சீசனில் பெங்களூரு எஃப்சி, ஜாம்ஷெட் பூர் எஃப்சி ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு அணி ஐ-லீக் உள்ளிட்ட கால்பந்து போட்டிகளில் ஏற்கெனவே தடம் பதித்துள்ள நிலையில், தற்போது ஐஎஸ்எல் போட்டியில் களம் காண்கிறது. ஜாம்ஷெட்பூர் இந்த கால்பந்து களத்துக்கு புதிய அணியாகும்.
    இரு புதிய அணிகளின் இணைப்பால் லீக் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த சீசன் ஐஎஸ்எல் போட்டி 4 மாதங்களுக்கு நீடிக்க உள்ளது. இதனிடையே, இந்த சீசனில் வெற்றி பெறும் அணி ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.
    இந்த சீசனில் புதிய மாற்றமாக பிரதான வீரர் ஒருவரை அணிகள் கண்டிப்பாக ஒப்பந்தம் செய்ய வேண்டிய முறை நீக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் பிரபல வீரர்களான அலெஸான்ட்ரோ டெல் பியரோ, மார்கோ மெட்டாரஸி, ராபர்டோ கார்லோஸ் போன்றவர்கள் ஐஎஸ்எல் போட்டிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
    அதேபோல், ஒவ்வொரு அணியிலும் பிளேயிங் லெவனில் 6 இந்திய வீரர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    'பிளே-ஆஃப் சுற்று இலக்கு'
    ஐஎஸ்எல் போட்டியின் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சியின் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய அணியின் பயிற்சியாளர் ஜான் கிரேகரி கூறியதாவது:
    சென்னை அணியின் முதல் இலக்குபிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதாகும். களத்தில் சரியான புரிதலை அடைய சில காலம் பிடிக்கும். சென்னையின் வானிலை காரணமாக இங்கு பயிற்சி சற்று பாதிக்கப்பட்டது. எனினும், அணியினர் சிறப்பான முறையில் தயாராகியுள்ளனர். போட்டிக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியுடனான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளோம் என்றார் ஜான்.
    சென்னை அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரரான தனபால் கணேஷ், பிளேயிங் லெவனுக்கு முன்னேறுவதே தனது இலக்கு என்று தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai