அதிரடி வெற்றி பெறுமா இந்தியா? இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு! கோலி அபார சதம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிரடி வெற்றி பெறுமா இந்தியா? இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு! கோலி அபார சதம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா மட்டும் 52 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல், கோலி டக் அவுட் ஆகினர். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது சமி அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுகள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். இந்தியா மொத்தமாக இலங்கையை விட 49 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியபோது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 79 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் போல்ட் ஆனார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியைக் காப்பாற்றிய 22 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் திரும்பினார். வேகமாக ரன்கள் குவிப்பார் என்று களமிறக்கப்பட்ட ஜடேஜா 41 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்து பெரேரா பந்துவீச்சில் வீழ்ந்தார். அஸ்வின் 7 ரன்களும் சாஹா 5 ரன்களும் புவனேஸ்வர் குமார் 8 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோலி, வேகமாக ரன்கள் குவித்தார். 119 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தியதோடு இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யவும் உதவினார். இது விராட் கோலியின் 18-வது டெஸ்ட் சதமாகும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 50-வது சதத்தை எட்டினார் கோலி. 

இலங்கை அணி இந்த இலக்கை 30 ஓவர்களில் எட்டவேண்டும் என்பதால் ஆட்டம் டிராவை நோக்கியே நகர்கிறது. இருப்பினும் 30 ஓவர்களில் இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அதிரடி வெற்றி பெறுமா என்கிற ஒரு எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடையே உள்ளது.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 7 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களை எடுத்துள்ளது. இதனால் ஆட்டத்தின் கடைசிப் பகுதி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com