ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி., அணியில் திடீர் மாற்றம், இங்கி., ஆடும் லெவன் அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் திடீரென சேர்க்கப்பட்டார்.
ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி., அணியில் திடீர் மாற்றம், இங்கி., ஆடும் லெவன் அறிவிப்பு

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இம்முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயண் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரில் 1882-ம் ஆண்டு இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது இங்கிலாந்து அணியை கொன்று அதன் சாம்பலை ஆஸ்திரேலியா எடுத்துச் சென்றதாக அந்நாட்டு பத்திரிகைகள் எழுதின.

எனவே அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக 1927-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இங்கிலாந்து வென்றது. அப்போது ஆஸ்திரேலிய அணி கொல்லப்பட்டு அதன் சாம்பலை இங்கிலாந்து கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

மேலும் இதனை கௌரவிக்கும் விதமாக பெய்ல் மற்றும் அந்த சாம்பல் அடங்கியதன் நினைவாக சிறிய கோப்பை ஒன்றும் இங்கிலாந்துக்கு பரிசளிக்கப்பட்டது. அன்று முதல் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ் என்று அழைக்கப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பாரம்பரியமான இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று வரை சற்றும் மவுசு குறையாத டெஸ்ட் தொடராக இது அமைத்து சிறப்புக்குரியதாகும்.

தற்போது 2017-18 காலகட்டத்தில் 70-ஆவது ஆஷஸ் தொடர் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 69 தொடர்களில் இரு அணிகளும் தலா 32 தொடர்களைக் கைப்பற்றியுள்ளன. 5 தொடர்கள் வெற்றி, தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இதில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மேதவுள்ளன.

நவம்பர் 23,2017 முதல் ஜனவரி 8,2018 வரை நடைபெறும் இந்த தொடரில் வென்று கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன. கடந்த 2 வாரங்களாக தீவிர பயிற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரும், துணைக் கேப்டனுமான டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிளென் மேக்ஸ்வெல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் மற்றொரு வீரரான ஷான் மார்ஷுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பதினோரு பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் பின்வருமாறு:

ஜோ ரூட் (கேப்டன்), மூயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேய்ர்ஸ்டோ, ஜேக் பால், ஸ்டூவர்ட் பிராட், அலஸ்டெய்ர் கூக், டேவிட் மாலன், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், க்றிஸ் வோக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com