உலக சாதனை செய்வாரா? செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நெருங்கியுள்ள 12 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

இந்தப் போட்டியை வென்று, செஸ் கிராண்ட் மாஸ்டரானால் உலக சாதனை செய்ய வாய்ப்புண்டு. இந்தியாவில் இதுவரை...
உலக சாதனை செய்வாரா? செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நெருங்கியுள்ள 12 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, 12 வயது பிரக்ஞானந்தா உலக சாதனை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா அசத்திக்கொண்டிருக்கிறார்.

8-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் அவொண்டர் லியாங்கைத் தோற்கடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு இரு கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடித்த பிரக்ஞானந்தா, மீண்டுமொருமுறை கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தியிருப்பது உலக ஜூனியர் செஸ் போட்டியில் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல் நார்ம் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா, 6.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். நார்வேயைச் சேர்ந்த டரி ஆர்யன் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தச் சுற்றில் முன்னிலையில் உள்ள டரி ஆர்யனுடன் மோதுகிறார் பிரக்ஞானந்தா. அது மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற இந்தப் போட்டியை வெல்லவேண்டும். அது சாத்தியமானால் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெறுவார்.

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்டமுடியவில்லை. அடுத்த இளம் கிராண்ட் மாஸ்டர் - இந்தியாவின் நெகி, 13 வருடம், 4 மாதம் 22 நாள்கள். மூன்றாம் இளம் கிராண்ட் மாஸ்டர் - மேக்னஸ் கார்ல்சன். 13 வருடம், 4 மாதம் 27 நாள்கள். 

பிரக்ஞானந்தா, 10 வயதில் (10 வருடம் 9 மாதங்களில்) சர்வதேச மாஸ்டராகி சாதனை செய்தார். 2005-ம் வருடம் ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்த பிரக்ஞானந்தா, உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, செஸ் கிராண்ட் மாஸ்டரானால் (12 வருடம் 3 மாதங்களில்), உலக சாதனை செய்ய வாய்ப்புண்டு. இந்தியாவில் இதுவரை 48 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 16 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

உலக ஜூனியர் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் அகான்க்‌ஷாவும் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் 8 சுற்றுகளின் முடிவில் 5.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்கள்.

இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com