உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி
By DIN | Published on : 23rd November 2017 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாந்துகாஷ் மீது தாக்குதல் தொடுக்கும் சசி சோப்ரா.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்றுவரும் 5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா உள்பட 5 பேர் முறையே தங்களது எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தனர்.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில், 64 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ரெபெக்கா நிக்கோலியை, சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற அன்குஷிதா போரோ எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டிய போரோவுக்கு, ரெபெக்கா கடுமையான சவால் கொடுத்தார். இருப்பினும் முடிவில் போரோ வென்றார்.
இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவில் போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் சாந்துகாஷ் அபிகானை, சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற சசி சோப்ரா 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில், இத்தாலி வீராங்கனை கியோவன்னா மர்சீஸை ஹரியாணாவைச் சேர்ந்த ஜோதி குலியா வீழ்த்தினார். அரையிறுதியில் பங்கேற்பவர்களுக்கு வெண்கலம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் நேஹா யாதவ் (+81 கிலோ எடைப் பிரிவு), அனுபமா (81 கிலோ) ஆகிய இருவரும், அந்தப் பிரிவில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்காத காரணத்தால் ஏற்கெனவே நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினர். இந்நிலையில், அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. இந்தப் போட்டியில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஒரு தங்கம்கூட இந்தியா கைப்பற்றவில்லை. உலகம் முழுவதிலும் 38 நாடுகளிலிருந்து 150 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.