Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: வெற்றியுடன் தொடங்கியது டெல்லி- Dinamani

சுடச்சுட

    
    isl

    டெல்லி வீரர்களைக் கடந்து பந்தை கடத்திச் செல்லும் முயற்சியில் புணே வீரர் எமிலியானோ.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஃப்சி புணே சிட்டி அணியை வீழ்த்தியது.
    இதன்மூலம் புணேவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெல்லி தனது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.
    புணேவில் இரு அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி சார்பில் பாலினோ டயாஸ், லாலியான்ஸுவாலா சாங்தே, மடியாஸ் மிராபஜே ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, புணே தரப்பில் எமிலியானோ அல்ஃபாரோ, மார்கோஸ் டெபார் தலா ஒரு கோல் அடித்தனர்.
    சொந்த மண்ணில் நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் ஆக்ரோஷத்துடன் ஆடத் தொடங்கியது புணே அணி. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் டெல்லி அணியும் ஆடியது. இரு அணிகளுமே தனது முதல் கோல் வாய்ப்புக்காக கடுமையாகப் போராடின.
    இந்நிலையில், ஆட்டத்தின் முதல் கால்மணி நேரத்துக்குப் பிறகு தனது சக வீரர் பாஸ் செய்த பந்தை டெல்லி வீரர் மிராபஜே கோல் போஸ்டுக்கு நேராக அனுப்ப முனைந்தும் அது பலனளிக்கவில்லை. இதேபோல், புணே வீரர் தலையால் முட்டி கோல் போஸ்டுக்கு அனுப்பிய பந்தை அருமையாக தடுத்தார் டெல்லி கோல்கீப்பர் அல்பினோ கோம்ஸ்.
    இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காததால், முதல் பாதி 0-0 என்ற கணக்கில் முடிந்தது. பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் டெல்லி வீரர் பாலினோ டயாஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். 46-ஆவது நிமிடத்தில் சக வீரர் லாலியான்ஸுவாலா பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார் அவர்.
    ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில் டெல்லியின் கோல் எண்ணிக்கை 2-ஆனது. இம்முறை பாலினோ டயாஸ் உதவியுடன் லாலியான்ஸுவாலா கோல் அடித்தார். இதனால் டெல்லி 2-0 என முன்னிலை பெற்றது. புணே முதல் கோலுக்கு தடுமாறி வந்த நிலையில், டெல்லி வீரர் மிராபஜே 65-ஆவது நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, டெல்லி 3-0 என முன்னிலை பெற்றது.
    இதனிடையே, புணேவின் தொடர் முயற்சிக்கு 67-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் சர்தாக் கோலுயியின் உதவியுடன் அணிக்கான முதல் கோலை அடித்தார் எமிலியானோ அல்ஃபாரோ. இந்த உத்வேகத்தில் அந்த அணி துடிப்புடன் ஆடத் தொடங்க, டெல்லிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
    ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் புணே வீரர் மார்கோஸ் டெபர் கோலடிக்க, ஆட்டம் 2-3 என்ற கோல் கணக்கில் பரபரப்பானது. இறுதி நொடிகளில் ஆட்டம் விறு விறுப்படைந்தாலும் முடிவில் டெல்லி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    இன்றைய ஆட்டம்
    சென்னையின் எஃப்சி-
    நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி
    நேரம்: இரவு 8 மணி
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai