Enable Javscript for better performance
ரத்தோர்-பிசிசிஐ அதிகாரிகள் சந்திப்பு: நாடா, பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விவகாரங்கள் விவாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரத்தோர்-பிசிசிஐ அதிகாரிகள் சந்திப்பு: நாடா, பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விவகாரங்கள் விவாதிப்பு

    By DIN  |   Published on : 23rd November 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை, பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி உள்ளிட்ட அந்த அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்தனர்.
    சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (நாடா) கீழ் பரிசோதனைக்கு உள்படுத்துவது, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
    இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரிகள் கூறியதாவது:
    ரத்தோர் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க நீண்ட நாள்களாகவே திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில், இச்சந்திப்பின்போது பிசிசிஐ-நாடா இடையேயான சச்சரவு, ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது ஆகிய விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் விவகாரம், விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்புடையது மட்டுமே அல்ல. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடையதாகும் என்று அந்த அதிகாரி கூறினார்.
    இந்த சந்திப்பின்போது பிசிசிஐ தரப்பில் ராகுல் ஜோரியோடு, நிர்வாகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கான பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி உடனிருந்தார். இச்சந்திப்பை அடுத்து, வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ சிறப்பு பொதுக் குழுவில் நாடா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்களை நாடாவின் ஊக்கமருந்து பரிசோதனை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருமாறு பிசிசிஐயிடம் அந்த அமைப்பு வற்புறுத்தி வருகிறது. எனினும், சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (வாடா) விதிகளுக்கு உள்பட்டுள்ளதால், நாடா அதிகாரத்தின் கீழ் வரவேண்டிய தேவை இல்லை என பிசிசிஐ தெரிவித்து வருகிறது.
    இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் மற்றும் அத்துமீறல்களையடுத்து பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை. எனினும், ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடி வருகிறது. இருதரப்பு கிரிக்கெட் போட்டி கடைசியாக கடந்த 2012-13 காலகட்டத்தில் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai