தமிழக வீரர் விஜய் சங்கரை இந்திய அணிக்குத் தேர்வு செய்தது ஏன்?: விராட் கோலி விளக்கம்!

நிச்சயமாக, பாண்டியா தான் எங்களுடைய முதன்மை ஆல்ரவுண்டர். ஆனால் அதேபோன்ற திறமையுள்ள மற்றவர்களையும்...
தமிழக வீரர் விஜய் சங்கரை இந்திய அணிக்குத் தேர்வு செய்தது ஏன்?: விராட் கோலி விளக்கம்!

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியில் தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (26) சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்தவரான இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன் ரைஸஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் விஜய் சங்கரின் தேர்வு குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டராக உள்ள விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளார். ஓர் அணியின் பயணத்தில் இன்னொரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்வது முக்கியம் என்றெண்ணி விஜய் சங்கரை அணியில் சேர்த்துள்ளோம். நிச்சயமாக, பாண்டியா தான் எங்களுடைய முதன்மை ஆல்ரவுண்டர். ஆனால் அதேபோன்ற திறமையுள்ள மற்றவர்களையும் கண்டுபிடித்துத் தேர்வு செய்ய எண்ணுகிறோம். அதன்மூலமாக அவர்களைப் பரிசோதித்து, வளர்த்து, மாற்று ஆல்ரவுண்டராகத் தயார்படுத்துகிறோம். வெளிநாடு செல்லும்போது இந்த அம்சம் மிக முக்கியம் எனக் கருதுகிறோம்.  

இதனால்தான் அவரை இந்திய அணிக்குத் தேர்வு செய்துள்ளோம். இங்கு என்ன நடக்கிறது, ஒரு போட்டிக்கு எப்படித் தயாராகவேண்டும், என்னென்ன திறமைகள் அவசியம் போன்றவற்றை உணர்ந்து அதன்படி அவருடைய ஆட்டத்தை மெருகேற்ற உதவுகிறோம். விஜய் சங்கர், பன்முகத்திறமைகள் கொண்ட வீரராக உள்ளார். நன்றாகப் பந்து வீசுகிறார். ஒருநாளைக்கு அவரால் நிச்சயம் 10 -12 ஓவர்கள் வீசமுடியும். பேட்டிங்கும் நன்றாகச் செய்கிறார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதைக் கவனித்தேன். இது அவருக்குப் பெரிய தருணம். இதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்டவர் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com