அட்டகாசமாகத் தொடங்கியது ஆஷஸ்: அரை சதமெடுத்து இங்கிலாந்து அணிக்கு உதவிய இரு புதிய வீரர்கள்!

குக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஷஸ் ரசிகர்கள் மிகவும் பரபரப்படைந்தார்கள்.
அட்டகாசமாகத் தொடங்கியது ஆஷஸ்: அரை சதமெடுத்து இங்கிலாந்து அணிக்கு உதவிய இரு புதிய வீரர்கள்!

ஆஷஸ் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 196/4 (வின்ஸ் 83, ஸ்டோன்மேன் 53) vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியது. 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 3-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ஸ்டார்க். அவருடைய பந்துவீச்சில் குக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஷஸ் ரசிகர்கள் மிகவும் பரபரப்படைந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த 30 வயது மார்க் ஸ்டோன்மேனும் 26 வயது ஜேம்ஸ் வின்ஸும் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தார்கள். குறைவான டெஸ்டுகள் விளையாடியுள்ள இருவரும் இன்றைய நாளில் ஆஸி.யின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். நிதானமாக விளையாடி இருவரும் அரை சதமெடுத்தார்கள். ஸ்டோன்மேன் 53 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தச் சில ஓவர்களில் 83 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார் வின்ஸ். 

50 பந்துகள் வரை தாக்குப்பிடித்த கேப்டன் ரூட் 15 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணிக்கு லேசான நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், டேவிட் மலான், மொயீன் அலி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்று இங்கிலாந்து அணி 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 28, மொயீன் அலி 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸி தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 24 ஓவர்கள் வீசிய லயன் 40 ரன்கள் மட்டும் கொடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் முதல் நாளன்று இங்கிலாந்து அணி வேகமாக ரன்கள் குவிக்கமுடியாமல் போனது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று 90 ஓவர்கள் வீசமுடியாமல் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com