Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 196/4- Dinamani

சுடச்சுட

    
    test

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ள இங்கிலாந்து, முதல் நாள் முடிவில் 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.
    அணியின் தொடக்க வீரர்களாக அலாஸ்டர் குக்-மார்க் ஸ்டோன்மேன் களம் கண்டனர். இதில் அலாஸ்டர் குக் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஹேன்ட்ஸ்காம்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
    அவரை அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ், ஸ்டோன்மேனுடன் கூட்டணி சேர்ந்தார். இந்த ஜோடி அருமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மழை பெய்ததை அடுத்து, ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது.
    அப்போது, ஜேம்ஸ் வின்ஸ் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டோன்மேன் 3 பவுண்டரிகளுடன் 150 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இங்கிலாந்து ஸ்கோர் 127-ஆக இருந்தபோது, இந்த ஜோடி பிரிந்தது.
    53 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோன்மேனை போல்டாக்கினார் பட் கம்மின்ஸ். ஜேம்ஸ்-ஸ்டோன்மேன் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்டோன்மேனை தொடர்ந்து ஜோ ரூட் களத்துக்கு வர, சற்று நேரத்தில் ஜேம்ஸ் வின்ஸும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
    12 பவுண்டரிகளுடன் 83 ரன்களை எட்டியிருந்த அவர், நாதன் லயனால் ரன் அவுட் செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜோ ரூட் 15 ரன்களுக்கு, பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகினார்.
    இவ்வாறாக முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மலான் 28, மொயீன் அலி 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.


    *   இந்த ஆட்டத்தில் ஜேம்ஸ்-ஸ்டோன்மேன் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 100-க்கும் அதிகமான ரன்களை எட்டுவது கடந்த 31 இன்னிங்ஸ்களில் இது முதல் முறையாகும். முன்னதாக, கடந்த 2016-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அலாஸ்டர் குக்-ஜோ ரூட் ஜோடி 185 ரன்கள் சேர்த்திருந்தது.
    *   முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் 42 ஆகும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai