Enable Javscript for better performance
'தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராக நேரம் இல்லை'- Dinamani

சுடச்சுட

    

    'தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராக நேரம் இல்லை'

    By DIN  |   Published on : 24th November 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.
    அதன் காரணமாகவே, அந்தத் தொடருக்குத் தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரில் பவுன்சர்களுக்கு சாதகமான மைதானத்தில் போட்டியை நடத்துமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
    இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி நிறைவடைகிறது. அதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்காக டிசம்பர் 27-ஆம் தேதி அந்நாட்டுக்கு இந்திய அணி புறப்படுகிறது.
    இந்நிலையில், இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்காக எந்தவொரு இடைவெளியும் இல்லாத காரணத்தால், அதற்கு தயாராகும் வகையில் நடப்பு தொடரில் பவுன்சர்களுக்கு சாதகமான மைதானத்தில் போட்டியை நடத்துமாறு கேட்டிருந்தேன்.
    தொடர்களுக்கு இடையே போதிய அவகாசம் இல்லாத காரணத்தால், இருக்கும் நேரத்தில் அந்தப் போட்டிக்கு தயாராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெரிய அளவிலான தொடர்களுக்கு அணியினர் சற்று வித்தியாசமான முறையில் தயாராக வேண்டியுள்ளது. எனவே, இரு முக்கியமான தொடர்களுக்கு இடையே போதிய அவகாசம் இருக்க 
    வேண்டும்.
    அவ்வாறு இல்லாத சூழ்நிலையில், டெஸ்ட் போட்டி முடிவுகளைத் தொடர்ந்து வீரர்களின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நாங்கள் விரும்பும் வகையில் தயாராவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்தும் சரிவர செயல்படவில்லை என்றால் நாங்கள் விமர்சனத்துக்கு உள்பட்டவர்கள் என்று விராட் கோலி கூறினார்.
    பாண்டியாவுக்கான மாற்று வீரர் விஜய் சங்கர்

    இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் குறித்து கோலி கூறியதாவது:
    ஆல்ரவுண்டர் இடத்தைப் பொருத்த வரையில் ஹார்திக் பாண்டியா அணியின் முதல் தேர்வு. இருப்பினும், அதே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறன்களுடன் கூடிய ஒரு நபரை மாற்று வீரராக தயார் படுத்த வேண்டும். அந்த வகையில், விஜய் சங்கர் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் அணிக்கான மாற்று வீரராக களம் காணலாம்.
    அணியில் நிகழ்வது என்ன என்பதை தெரிந்துகொண்டு, போட்டியின்போது அவர் அதற்கேற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகவே அவர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலைப் பயிற்சியில் விஜயின் செயல்பாடுகளை பார்த்த வரையில் அவர் சிறப்பாகவே செயல்படுகிறார் என்று கோலி கூறினார்.
    கோலியின் கருத்து தீவிரமானது: பிசிசிஐ கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையேயான இடைவெளி தேவை குறித்த கோலியின் கருத்து தொடர்பாக பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியதாவது:
    விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் என்ற முறையில், கிரிக்கெட் தொடர்பான அவரது கருத்துக்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. தொடர் போட்டிகளால் வீரர்கள் களைப்படைவதாக உணரும் விவகாரத்தில் சற்று விரிவாக யோசித்து செயல்பட வேண்டும்.
    கோலியின் இந்த கருத்து தொடர்பாக எதிர்வரும் பிசிசிஐயின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று கன்னா கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai