Enable Javscript for better performance
முதல் வெற்றி யாருக்கு?: இன்று தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்- Dinamani

சுடச்சுட

  

  முதல் வெற்றி யாருக்கு?: இன்று தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்

  By DIN  |   Published on : 24th November 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  test1

  இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
  முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் 2-ஆவது போட்டியில் களம் காண உள்ளன.
  இந்தப் போட்டியைப் பொருத்த வரையில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவன் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முரளி விஜய் அணிக்கு திரும்பியுள்ளார். தவன் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் அணிக்குத் திரும்புகிறார்.
  அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு திருமணம் காரணமாக அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இஷாந்த் சர்மா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
  அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் முற்றிலுமாகத் தடுமாற, புஜாரா மட்டும் சற்று நிலைத்தார். 2-ஆவது இன்னிங்ஸில் ஷிகர் தவன் அருமையான தொடக்கத்தை அளிக்க, கோலி தனது அதிரடியைக் காட்டினார். இந்த டெஸ்டிலும் கோலி தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.
  தவனுக்குப் பதிலாக களம் காணும் முரளி விஜய், அணியில் நீண்ட நாளுக்குப் பிறகு கிடைத்துள்ள இடத்தை தக்க வைக்கும் வகையில் விளையாட வேண்டியுள்ளது. கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே தங்களது வழக்கமான பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆல்ரவுண்டர் வரிசையில் ஹார்திக் பாண்டியா இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக முதல் முறையாக விஜய் சங்கர் களம் காணலாம்.
  பந்துவீச்சைப் பொருத்த வரையில் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் ஜடேஜா இப்போட்டியில் பிளேயிங் லெவனில் களம் காண்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். அல்லது விஜய் சங்கர் அணிக்கு வரும் பட்சத்தில் அவர் அந்த இடத்தை பூர்த்தி செய்வார்.
  வேகப்பந்துவீச்சின் மூலம் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இலங்கை வீரர்களை திணரடிக்க உள்ளனர்.
  இலங்கையை பொருத்த வரையில், முதல் போட்டியில் தோல்வி அடையாமல் டிரா செய்துள்ளது அவர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்திருக்கும். அந்த அணியில் மாற்றம் ஏதும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், முதல் போட்டியில் அதிக ரன்கள் வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த கமகே, பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படலாம்.
  3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை களம் காணும் பட்சத்தில் விஸ்வா ஃபெர்னான்டோவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில் கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய மேத்யூஸ், திரிமானி பலமாகத் திகழ்கின்றனர்.
  மைதானம்: கோலி கருத்து
  நாகபுரி மைதானம் குறித்து கோலி கூறுகையில், 'நாகபுரி மைதானத்தின் ஆடுகளம் சிறப்பான ஒன்றாகத் தெரிகிறது. இந்த ஆடுகளமானது முதல் இரு நாள்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்' என்றார்.
  அணிகள் விவரம்
  இந்தியா: விராட் கோலி 
  (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், ரோஹித் சர்மா.
  இலங்கை: 
  தினேஷ் சண்டிமல் (கேப்டன்), ஏஞ்ஜெலோ மேத்யூஸ், திமுத் கருணாரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெய டி சில்வா, சுரலங்கா லக்மல், டாசன் சனகா, விஸ்வா ஃபெர்னான்டோ, லாஹிரு கமகே, லக்ஷன் சன்டகன், சதீரா சமரவிக்ரமா, தில்ருவன் பெரேரா, ரோஷன் சில்வா.


  போட்டி நேரம்: காலை 9 மணி
  நேரடி ஒளிபரப்பு: 
  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai