2 ரன்களில் ஆல் அவுட் ஆன நாகலாந்து மகளிர் அணி! ஒரே பந்தில் இலக்கை எட்டிய எதிரணி!

காலையில் ஆரம்பித்து மாலையில் முடிந்திருக்கவேண்டிய போட்டி மதிய உணவு இடைவேளைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே...
2 ரன்களில் ஆல் அவுட் ஆன நாகலாந்து மகளிர் அணி! ஒரே பந்தில் இலக்கை எட்டிய எதிரணி!

கிரிக்கெட்டில் இதுபோன்ற விநோதங்கள் அவ்வப்போது நடைபெறும். 

நாகலாந்து -  கேரள அணிகளுக்கு இடையான பிசிசிஐ சார்பில் நடைபெற்ற மகளிர் யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, விநோதமான முறையில் கவனம் பெற்றுள்ளது.

குண்டூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நாகலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை மேனகா முதலில் ஒரு சிங்கிள் எடுத்தார். பிறகு ஒரு வைட் வீசப்பட்டது. அணியின் ஸ்கோர் இரண்டு என இருந்தபோது மேனகாவின் விக்கெட் வீழ்ந்தது. ஒரு மாபெரும் சரிவுக்குத் தொடக்கமாக அந்த விக்கெட் இருக்கும் என யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு விளையாட வந்த 9 நாகலாந்து வீராங்கனைகளாலும் ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் அத்தனை பேரும் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். 9 வீராங்கனைகள் பூஜ்ஜியம் எடுத்ததால் நாகலாந்து அணி 17 ஓவர்களில் (!) 2 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேரள அணியின் கேப்டன் மின்னு மணி நான்கு ஓவர்களில் ஒரு ரன்னும் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த இமாலய ஸ்கோரை ஒரே பந்தில் தாண்டியது கேரள அணி. கேரள தொடக்க வீராங்கனை அன்சு முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றிவாகை சூடினார்.  இது ஒரு சாதனை வெற்றியாகும். 2006-ல் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணிக்கு, மியான்மர் அணியைத் தோற்கடிக்க 2 பந்துகள் தேவைப்பட்டன. ஆனால் கேரள அணியின் வெற்றிக்கு ஒரே பந்து மட்டுமே தேவையாக இருந்தது. கேரள அணியின் இந்த வெற்றி உலக சாதனை என கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

காலையில் ஆரம்பித்து மாலையில் முடிந்திருக்கவேண்டிய போட்டி மதிய உணவு இடைவேளைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. பிசிசிஐ போட்டியில் இதுபோன்ற விநோதம் ஏற்பட்டிருப்பது பரவலான விமரிசனங்களை வரவழைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com