சுடச்சுட

  

  2-ஆவது டெஸ்ட்: 205-க்கு இலங்கை 'ஆல் அவுட்' கருணாரத்னே, சண்டிமல் அரைசதம்

  By DIN  |   Published on : 25th November 2017 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  test

  திரிமானி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

  இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன் சண்டிமல் அரைசதம் கடந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

  நாகபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக சமரவிக்ரமா-கருணாரத்னே களம் இறங்கினர். இதில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்திருந்த சமரவிக்ரமா, 4-ஆவது ஓவரில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
  அவரை தொடர்ந்து வந்த திரிமானி நீண்ட நேரம் நிலைத்த போதிலும், 9 ரன்களே எடுத்து பெவிலியன் திரும்பினார். 24-ஆவது ஓவரில் அவரை எல்பிடபிள்யூ செய்தார் இஷாந்த். மறுமுனையில் கருணாரத்னே நிதானமாக ஆடி வர, திரிமானியை அடுத்து வந்த மேத்யூஸ் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை எட்டி ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
  இதனால் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. இந்நிலையில், கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் தினேஷ் சண்டிமல். இந்த இணை அருமையாக ஆடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தியது. இதில் கருணாரத்னே இருமுறை கண்டம் தப்பினார். முதலில் அஸ்வின் ஓவரில் அவர் அளித்த கேட்ச்சை புஜாரா பிடிக்க முயன்றும் முடியாமல் போனது.
  பின்னர் ஜடேஜா வீசிய ஓவரில் கருணாரத்னேவை ஸ்டம்பிங் செய்தார் ரித்திமான் சாஹா. எனினும், கிரீஸை தாண்டிய வகையில் ஜடேஜா பந்துவீசியதால் அது 'நோ பால்' ஆனது. இவ்வாறாக, கருணாரத்னே 6 பவுண்டரிகளுடனும், சண்டிமல் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடனும் அரைசதம் கடந்தனர்.
  இந்த ஜோடியை 50-ஆவது ஓவரில் பிரித்தார் இஷாந்த் சர்மா. 51 ரன்கள் எடுத்திருந்த கருணாரத்னே, எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ந்து வந்த டிக்வெல்லா 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்து, ஜடேஜா பந்துவீச்சில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
  பின்னர் வந்த டாசன் ஷனகா 2, தில்ருவன் பெரேரா 15 ரன்களில் நடையைக் கட்டினர். இதில் ஷனகாவை, அஸ்வின் போல்டாக்க, பெரேராவை எல்பிடபிள்யூ செய்தார் இஷாந்த் சர்மா. இந்நிலையில், நிதானமாக ஆடி வந்த சண்டிமல் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். அவரை அடுத்து வந்த லக்மல் 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஹெராத் 4 ரன்களில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
  இந்திய தரப்பில் அஸ்வின் 4, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.


  இந்தியா-11/1: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 2, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

  கிரிக்கெட் துளிகள்...
  * முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் எடுத்த இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் தனது 1000-ஆவது ரன்னை தொட்டுள்ளார். இந்த ஆண்டில் இத்தகைய இலக்கை எட்டும் 2-ஆவது வீரர் கருணாரத்னே ஆவார். முன்னதாக, தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் இந்த ஆண்டில் 1097 ரன்கள் எடுத்துள்ளார். எல்கர் 20 இன்னிங்ஸ்களில் எட்டிய இந்த இலக்கை, கருணாரத்னே 23-ஆவது இன்னிங்ஸில் தொட்டுள்ளார்.

  * இந்த ஆட்டத்தில் திரிமானியை போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். சர்வதேச போட்டிகளில் திரிமானியை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்வது இது 12-ஆவது முறையாகும். மொத்தமாக 6 முறை ஒருநாள் ஆட்டங்களிலும், 5 முறை டெஸ்ட் போட்டிகளிலும், ஒருமுறை டி20 ஆட்டத்திலும் திரிமானியை அவுட்டாக்கியுள்ளார் அஸ்வின். அவர் வேறு எந்த பேட்ஸ்மேனையும் இத்தனை முறை ஆட்டமிழக்கச் செய்ததில்லை.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai