பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் டெஸ்ட்: அட்டகாசமான சதத்தால் ஆஸ்திரேலியாவை நிமிர வைத்த ஸ்மித்!

இந்த டெஸ்ட் போட்டியின் அடுத்த இரு நாள்களும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக அமையும்...
பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் டெஸ்ட்: அட்டகாசமான சதத்தால் ஆஸ்திரேலியாவை நிமிர வைத்த ஸ்மித்!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. அணி கேப்டன் ஸ்மித், மிகவும் பொறுப்புடன் விளையாடி சதமெடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்டநேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 64, ஷான் மார்ஷ் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட, ஆஸ்திரேலியா மீதமுள்ள 6 விக்கெட்டுகளுக்கு 137 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கியது. ஷான் மார்ஷ் 51 ரன்களில் ஆட்டமிழந்தபிறகு சீரான இடைவெளியில் மேலும் இரு விக்கெட்டுகள் விழுந்தன. 209 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்தபோது கேப்டன் ஸ்மித்துக்கு அருமையான இணையாக விளங்கினார் கம்மின்ஸ். 9 பவுண்டரிகளுடன் மிகவும் நிதானமாக விளையாடிய ஸ்மித், 261 பந்துகளில் சதத்தை எட்டினார். இக்கட்டான நிலையிலும் அணியை மீட்டெடுத்து அற்புதமாக விளையாடிய ஸ்மித், ரசிகர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தினார்.

139 பந்துகள் தாக்குப்பிடித்து 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த கம்மின்ஸ், வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் 6 ரன்களில் ஹேஸில்வுட் அவுட் ஆனபோது ஆஸி. அணி 4 ரன்கள் பின்தங்கியிருந்தது. கடைசியாகக் களமிறங்கிய நாதன் லயன் 37 பந்துகள் தாக்குப்பிடித்து அணி முன்னிலை பெற தன்னாலான உதவியைச் செய்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் 326 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித்தின் இந்தச் சதத்துக்குப் பெரிய பாராட்டுகள் கிடைத்துள்ளன. கிரிக்கெட் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் ஸ்மித்தைப் பாராட்டித்தள்ளியுள்ளார்கள்.

இரு அணிகளுக்கும் மிகவும் சவாலாக அமைந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்தது. குக், வின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இருவருடைய விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட் எடுத்தார். ஸ்டோன்மேன் 19, வின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 3-ம் நாளின் முடிவில் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணி பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி அளிப்பதால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரசியமாக கட்டத்தை அடைந்துள்ளது. குறைந்தபட்சம் 250 ரன்கள் இலக்காவது ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியின் அடுத்த இரு நாள்களும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com