2-வது டெஸ்டில் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை! புஜாரா, விஜய் சதம்!

இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது...
2-வது டெஸ்டில் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை! புஜாரா, விஜய் சதம்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதமெடுத்துள்ளார்கள். இதனால் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

நாகபுரியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன் சண்டிமல் அரைசதம் கடந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 2, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று இந்திய அணி ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு அழுத்தமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்த்தியான பந்துவீச்சால் விஜய்யும் புஜாராவும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டார்கள். மிகவும் நிதானமாக ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் திட்டங்களைத் தோல்வியடையச் செய்தார்கள். இருவரும் சேர்ந்து 143 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 112 பந்துகளில் முரளி விஜய் அரை சதமெடுத்தார். 2-ம் நாளின் முதல் பகுதியில் இருவரும் 86 ரன்கள் சேர்த்தார்கள். அதிலும் இன்றைய முதல் 18 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 56, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு கவனமான ஆட்டத்தை விஜய்யும் புஜாராவும் தொடர்ந்தார்கள். விஜய் - புஜாரா ஆகிய ஒருவரும் 2-வது விக்கெட்டுக்கு 260 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பின்னர் 145 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார் புஜாரா. இருவருடைய கூட்டணி 150 ரன்களைச் சேர்த்தபிறகு முரளி விஜய் 187 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 10-வது சதமாகும். தனிப்பட்ட காரணங்களுக்காக 2-வது டெஸ்ட் போட்டியை தவன் தவறவிட்டதால் அவருடைய இடம் விஜய்க்குக் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இதனால் அடுத்த டெஸ்டிலும் விஜய் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேநீர் இடைவேளையை நெருங்கும்போது இந்திய அணியின் ஆட்டம் வேகம் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தார்கள். ஒரு கேட்சைத் தவறவிட்டதோடு டிஆர்எஸ்-ஐயும் தவறாகப் பயன்படுத்திய இலங்கை அணிக்கு இன்றைய நாளின் 2-வது பகுதி மோசமாக அமைந்தது.  

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 65 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 106, புஜாரா 71 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். விஜய்யும் புஜாராவும் 2-வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்துள்ளார்கள். 73-வது ஓவரில் இந்திய அணி இலங்கை அணியின் ஸ்கோரைத் தாண்டி முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி எப்படியும் 200 ரன்களுக்கு அதிகமாக முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரண்டாவது நாளில் சதமெடுத்த முரளி விஜய், இன்னும் அதிகமாக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவறான ஷாட்டால் ஹெராத் பந்துவீச்சில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விஜய்யும் புஜாராவும் இரண்டாவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்துள்ளார்கள். விராக் கோலி களமிறங்கியபிறகு ஆட்டம் சுறுசுறுப்பு அடைந்தது. அவர்களுடைய கூட்டணியின் ரன் ரேட் நான்கு ரன்களாக இருந்தது. 80 ஓவர்களுக்குப் பிறகு இலங்கை அணி புதிய பந்தைத் தேர்வு செய்தது. இருந்தும் இந்திய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. புஜாரா 246 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 14-வது டெஸ்ட் சதமாகும். புஜாரா - கோலி கூட்டணி 70 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது. புஜாராவின் சதத்துக்குப் பிறகு விராட் கோலி விரைவாக ரன்கள் சேர்த்து 66 பந்துகளில் அரை சதமெடுத்தார். 

2-ம் நாளின் முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதுவரை, முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா - கோலி கூட்டணி 96 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 121, கோலி 54 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com