Enable Javscript for better performance
ஆசிய மாரத்தான்: இந்தியாவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சீனாவில் நடைபெற்ற 16-ஆவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆடவர் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.
    இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 15 நிமிடம் 48 விநாடிகளில் கடந்து கோபி முதலிடம் பிடித்தார். உஸ்பெகிஸ்தானின் ஆன்ட்ரே பெட்ரோவ் 2 மணி 15 நிமிடம் 51 விநாடிகளில் வந்து 2-ஆவது இடத்தையும், மங்கோலியாவின் பியாம்பலேவ் செவின்ராவ்தன் 2 மணி 16 நிமிடம் 14 விநாடிகளில் எட்டி 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
    கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த கோபி, இந்த ஆண்டு புது தில்லி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் 2 மணி 15 நிமிடம் 25 விநாடிகளில் இலக்கை எட்டி 25-ஆவது நபராக வந்தார்.
    வெற்றி குறித்து கோபி கூறுகையில், "இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்பதில் மகிழ்ச்சி. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல முழு முயற்சி செய்வேன்' என்றார்.
    ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் கடந்த 1988-ஆம் ஆண்டு விஜய் சிங், 2010-ஆம் ஆண்டு தீப் சந்த் ஆகிய இந்தியர்கள் வெண்கலம் வென்றிருந்தனர். இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஏற்கெனவே தங்கம் வென்றுள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு ஆஷா அகர்வாலும், 1992-ஆம் ஆண்டு சுனிதா கோதராவும் முதலிடம் பிடித்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai