Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது புணே- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி, அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
    இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு புணேவுக்கு கிடைத்தது. 13-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் எமிலியானோ அல்ஃபாரோவின் உதவியுடன் கோலடித்தார் மார்செலோ பெரெய்ரா.
    28-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ùஸகின்ஹாவின் அருமையான கோல் முயற்சியை அற்புதமாகத் தடுத்தார் புணே கோல் கீப்பர். அடுத்தடுத்த நிமிடங்களில் கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு, மிகச் சரியாக தடைகளை ஏற்படுத்திய புணே, தனது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.
    இதன் காரணமாக முதல் பாதி நிறைவில் புணே 1-0 என முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதி தொடங்கிய 5-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா தனது கணக்கை தொடங்கியது. ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் விபின் சிங். இதனால் ஆட்டம் சமன் ஆனது.
    ஆனால் அதற்கான பதிலடியாக, அடுத்த நிமிடத்திலேயே புணே வீரர் ரோஹித் குமார் ஒரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். சகவீரர் பெரெய்ரா அடித்த கார்னர் கிக்கை, தலையால் முட்டி அவர் கோலடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் மார்செலோ பெரெய்ரா மீண்டும் ஒரு கோல் அடிக்க, புணே 3-1 என முன்னிலை பெற்றது.
    80-ஆவது நிமிடத்தில் புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஒரு கோல் அடித்து அணியை மேலும் பலம் பெறச் செய்தார். இந்நிலையில், கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் அந்த அணி 1-4 என்ற கணக்கில் வீழ்ந்தது.
    பெங்களூரு வெற்றி: இதனிடையே, பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai