Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன்: வெள்ளி வென்றார் சிந்து- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான தைவானின் டாய் ஸூ யிங்கை எதிர்கொண்ட சிந்து, அதில் 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
    டாய் ஸூவை இத்துடன் 11-ஆவது முறையாக எதிர்கொண்ட சிந்து, அவரிடம் 8-ஆவது முறையாக வீழ்ந்துள்ளார். 
    முன்னதாக, ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே டாய் ஸூ யிங் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். கடுமையாக போராடி அவ்வப்போது ஒரு சில புள்ளிகளை சிந்து கைப்பற்றி வந்தார். ஒரு கட்டத்தில் 18-18 என்ற கணக்கில் இருவரும் சமநிலை வகித்தனர். இருப்பினும், முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் டாய் ஸூ கைப்பறினார்.
    இரண்டாவது செட்டில் டாய் ஸூவின் பல கடினமான ஷாட்களை சிந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், அவருக்கு சிந்து கடும் சவாலாக விளங்கினார். இருப்பினும், அந்த செட்டையும் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார் டாய் ஸூயிங். இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த சிந்து, அதில் 2-இல் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும், இந்தியாவில் இரண்டு சாம்பியன்ஷிப் பட்டங்களையும் சிந்து வென்றுள்ளார்.
    ஹாங்காங் ஓபனில் இந்தியர்களை பொருத்த வரையில், கடந்த 1982-ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனும், 2010-இல் சாய்னா நெவாலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai