2-வது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இலங்கை; உலக சாதனையின் அருகில் அஸ்வின்!

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை 260 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம்..
2-வது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இலங்கை; உலக சாதனையின் அருகில் அஸ்வின்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறவுள்ளது. இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நிற்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையே நாகபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. முதல் நாளிலேயே 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணியில், அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அபாரமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கோலி 213, புஜாரா 143, விஜய் 128, ரோஹித் சர்மா 102* ரன்கள் குவித்தார்கள். இலங்கையின் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஹெராத், ஷனகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 3-ம் நாள் முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. கருணாரத்னே 11, திரிமானி 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை 384 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. இலங்கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து திருப்பத்தை உண்டாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இன்றைய நாளின் 7-வது ஓவரை வீசவந்த ஜடேஜா 18 ரன்களில் கருணாரத்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு மிகப்பெரிய சரிவின் தொடக்கமாக இந்த விக்கெட் இருந்தது. 23 ரன்களில் திரிமானே, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 32 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்த மேத்யூஸ், ஜடேஜாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் இஷாந்த் சர்மா நான்கே ரன்களில் நிரோஷன் டிக்வெல்லாவை வெளியேற்றினார். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்கிற பரிதாபமான நிலையை அடைந்தது இலங்கை அணி. 

இதனால் கடுப்பான கேப்டன் தினேஷ் சண்டிமலும் டாசன் சனகாவும் அதிரடி ஆட்டத்தைச் சில நிமிடங்கள் வெளிப்படுத்தினார்கள். திடீரென 7 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் இந்த முயற்சி சனகாவின் விக்கெட்டைப் பறித்தது. அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற சனகா ராகுலிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்கமுடியாமல் தில்ருவன் பெரேராவும் ஹெராத்துக்கும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். பெரேராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து மூன்று வருடங்களாக 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். 

இந்த களேபரத்துக்கு நடுவே தினேஷ் சண்டிமல் 64 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 4-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 41 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. சண்டிமல் 53 ரன்களுடனும் லக்மல் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். இன்றைய நாளின் முதல் பகுதியில் 7 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இன்று மூன்று விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 299 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதையடுத்து குறைவான டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைக்கத் தயாராக உள்ளார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை 260 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளன. இதனால் இன்றைய நாளின் 2-வது பகுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com