Enable Javscript for better performance
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 2-ஆவது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 2-ஆவது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது

    By DIN  |   Published on : 28th November 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    test

    வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் இந்திய அணியினர்.

    இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த இலங்கை, 49.3 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமல் 61 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இரு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் கேப்டன் தினேஷ் சண்டிமல் 57, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர் அஸ்வின் 4, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அபாரமாக ஆடியது. முரளி விஜய் (128), சேதேஷ்வர் புஜாரா (143), ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடிக்க, கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் (213) விளாசி அணியின் ஸ்கோரை இமாலய உச்சிக்கு இட்டுச் சென்றார்.
    3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியா 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது ரோஹித் சர்மா 102, ரித்திமான் சாஹா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஷனகா, ஹெராத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
    பின்னர், முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய இலங்கை 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 4-ஆவது நாளான திங்கள்கிழமையை கருணாரத்னே 11, திரிமானி 9 ரன்களுடன் தொடங்கினர்.
    அன்றைய ஆட்டத்தில் இலங்கை தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தோல்விக்கு தள்ளப்பட்டது. கருணாரத்னே 18, திரிமானி 23 ரன்களில் வீழ்ந்தனர். தொடர்ந்து வந்த மேத்யூஸ் 10 ரன்களில் வெளியேற, 63 பந்துகளில் அரைசதம் கடந்த சண்டிமல் மட்டும் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷனகா 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, பெரேரா, ஹெராத், கமகே டக் அவுட் ஆகினர். இறுதியாக சுரங்கா லக்மல் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
    அதே வெற்றி...: இதனிடையே, கடந்த 2007-ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியா இதேபோல இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய இந்திய அணிக்கு ராகுல் திராவிட் கேப்டனாக இருந்தார்.
    அஸ்வின் 'அதிவேக' சாதனை
    இந்தப் போட்டியின் இறுதி விக்கெட்டாக இலங்கையின் லாஹிரு கமகேவை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்.
    இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 300-ஆவது விக்கெட்டாகும். இந்த இலக்கை அவர் தனது 54-ஆவது போட்டியில் எட்டியுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
    முன்னதாக, 1981-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லிலீ 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிவேகமாக இருந்தது. இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் அந்த சாதனையை தகர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் முத்தையா முரளிதரன் (58 டெஸ்ட்), ரிச்சர்ட் ஹேட்லீ (61), டேல் ஸ்டெய்ன் (61) ஆகியோர் அஸ்வினை பின் தொடருகின்றனர்.
    அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் அஸ்வின் 5-ஆவது வீரர் ஆவார். இப்பட்டியலில் அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாஹீர் கான் (311) ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.
    தனது சாதனை குறித்து அஸ்வின் கூறியதாவது:
    இந்த 300 விக்கெட் சாதனையை அப்படியே இரட்டிப்பாக்க இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில், நான் ஏறத்தாழ 50 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். சுழற்பந்துவீச்சானது, எல்லோரும் நினைப்பது போல் அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு அதிகம் தயாராக வேண்டியுள்ளது. பந்தை கைகளில் இருந்து விடுவிப்பதில் வித்தியாசமான முறைகளை பழகி வருகிறேன் என்று அஸ்வின் கூறினார்.
    இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மொத்தம் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அஸ்வின், இப்போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பேட்ஸ்மேன்கள் கைவிட்டனர்
    இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனதே தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல் கூறினார்.
    இதுகுறித்து அவர் கூறுகையில், 'டாஸ் வென்ற நிலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால், முதல் நாளிலேயே எங்களது பேட்டிங் வீரர்கள் அதிகம் ஸ்கோர் செய்யாத காரணத்தால் அணி வீழ்ச்சியை சந்தித்தது. 
    இந்தியா போன்ற அணிக்கு எதிராக வெற்றி பெறவோ, அல்லது 5 நாள்களும் தொடர்ந்து நிலைக்கவோ முதல் இன்னிங்ஸில் குறைந்தது 350 ரன்களுக்கு மேலாவது அடித்திருக்க வேண்டும். முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தால், நிலைத்து ஆட வேண்டும் என்று இங்கு வருவதற்கு முன்பாக போட்டி குறித்து திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதிகபட்சமாக 50-60 ரன்களுக்குள்ளாக பேட்ஸ்மேன்கள் வீழ்ந்துவிட்டோம்.
    அணியினர் கண்டிப்பாக இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். மேத்யூஸ் போன்ற மூத்த வீரர்கள் அதிகம் ஸ்கோர் செய்து, இளம் வீரர்களுக்கு முன்னுதாரணாக இருந்திருக்க வேண்டும்' என்றார்.

    **
    துளிகள்
    32 இந்த ஆண்டில் இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 32 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இது ஓராண்டில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றியாகும். முன்னதாக, 2016-ஆம் ஆண்டு 31 வெற்றிகள் பெற்றிருந்தது.

    7 இந்த ஆண்டில் இலங்கை டெஸ்ட் போட்டியில் சந்திக்கும் 7-ஆவது தோல்வி இதுவாகும். இதுவே ஓராண்டில் அந்த அணியின் அதிகபட்ச தோல்வி கணக்காகும். முன்னதாக 2015-ஆம் ஆண்டிலும் இதேபோல் அந்த அணி 7 டெஸ்ட் தோல்விகளை சந்தித்துள்ளது.

    1 இலங்கை இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்துள்ளது. இதுவே டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச தோல்வி. முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.

    3 சர்வதேச அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகளில் (2015-17) 50 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-ஆவது வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, ஷேன் வார்னே (1993-95), முத்தையா முரளிதரன் (2000-02) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai