ரஞ்சி: ஒரே மாதத்தில் 1000 ரன்கள் குவித்த கர்நாடக வீரர்! லக்‌ஷ்மண் சாதனையைத் தாண்டுவாரா?

இந்த வருட ரஞ்சி போட்டியில், மயங்க் அகர்வாலைத் தவிர வேறு எந்த வீரரும் 800 ரன்களைக்கூட கடக்கவில்லை...
ரஞ்சி: ஒரே மாதத்தில் 1000 ரன்கள் குவித்த கர்நாடக வீரர்! லக்‌ஷ்மண் சாதனையைத் தாண்டுவாரா?

நவம்பர் 1-ம் தேதி 304 ரன்கள் எடுத்தார் 26 வயது கர்நாடக வீரர் மயங்க் அகர்வால். 

இதன்பிறகு அவர் பேட்டுக்கு ஓய்வே இல்லை. இந்த மாதம் 28 நாள்களில் மயங்கர் அகர்வால், ரஞ்சி போட்டிகளில் எடுத்த ரன்கள்:

304*, 176, 23, 90, 133*, 173, 134. 

ஒரே மாதத்தில் 1033 ரன்கள் குவித்துள்ளார்! ஆனால் இந்த வருட முதல் இரு ரஞ்சி போட்டிகளில் மயங்க் எடுத்த ரன்கள் - 31, 0, 0. மூன்று இன்னிங்ஸில் 2 பூஜ்ஜியங்கள் எடுத்து அணியிலிருந்து வெளியேறுகிற சூழல் நிலவியபோது அடுத்தப் போட்டியில் முச்சதம் எடுத்து அசத்தினார். மஹாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 490 பந்துகளில் 4 சிக்ஸர், 30 பவுண்டரிகளுடன் முச்சதம் எடுத்தார். ரஞ்சி போட்டியில் கர்நாடகா சார்பில் அதற்கு முன்பு கேஎல் ராகுல், கருண் நாயர் ஆகியோர் முச்சதம் எடுத்தார்கள். அவர்களுடன் மயங்க் அகர்வாலும் இணைந்தார். 

இந்த வருட ரஞ்சிப் போட்டிக்கு முன்பு 20 முதல்தரப் போட்டிகளில் 2 சதங்கள் மட்டுமே எடுத்திருந்தார் மயங்க் அகர்வால். ஆனால், இந்த வருட ரஞ்சியில் மட்டும், 6 போட்டிகளில் 5 சதங்கள் 2 அரை சதங்களுடன் 1064 ரன்கள் எடுத்துள்ளார். 2-ம் இடத்தில் உள்ள ஆந்திராவின் விஹாரி, 6 போட்டிகளில் 752 ரன்களே எடுத்துள்ளார். அதாவது, மயங்க் அகர்வாலைத் தவிர வேறு எந்த வீரரும் இந்த வருடம் 800 ரன்களைக் கடக்கவில்லை. இதனால் மயங்க் அகர்வால் மீது அதிகக் கவனம் குவிந்துள்ளது.

1999-00 வருட ரஞ்சி போட்டியில் விவிஎஸ் லக்‌ஷ்மண் 1415 ரன்கள் எடுத்தார். அந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மயங்க் இதுவரை 1064 ரன்கள் எடுத்துள்ளதால் இன்னமும் 351 ரன்கள் எடுத்தால் லக்‌ஷ்மண் சாதனையைக் கடந்துவிடலாம். நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்றுள்ள கர்நாடக அணி அரையிறுதி வரைக்கும் தகுதி பெற்றால் போதும் லக்‌ஷ்மணின் சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல இத்தகைய ஃபார்மில் உள்ள வீரர் இந்திய அணிக்குத் தேர்வாகவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இரு விருப்பங்களும் நிறைவேறுமா?

ரஞ்சி போட்டியில் ஒரு சீசனில் ஆயிரம் ரன்கள் எடுத்த கர்நாடக வீரர்கள்

1280 ரன்கள் - ஆர் விஜய் பரத்வாஜ் 1998-99
1064 ரன்கள் - மயங்க் அகர்வால் 2017-18
1033 ரன்கள் - கேஎல் ராகுல் 2013-14

ஒரு சீசனில் நான்கு ஆட்டங்களில் 5 சதங்கள்

ருசி மோடி (மும்பை) 1944-45
அஜய் சர்மா (தில்லி) - 1996-97
மயங்க் அகர்வால் (கர்நாடகா) 2017-18

ரஞ்சி: ஒரு போட்டியில் இரு சதங்கள் எடுத்த கர்நாடக வீரர்கள்

குனால் கபூர் - ஹரியாணாவுக்கு எதிராக 106, 100* (2012-13)
மயங்க் அகர்வால் - ரயில்வேக்கு எதிராக 173, 134 (2017-18)

ரஞ்சி சீசனில் அதிக ரன்கள்

1. விவிஎஸ் லக்‌ஷ்மண் - 1415 ரன்கள் (1999-00)
2. ஸ்ரேயாஸ் ஐயர் - 1321 ரன்கள் (2015-16)
3. பிரியங் பஞ்சல் - 1310 ரன்கள் (2016-17)
4. விஜய் பரத்வாஜ் - 1280 ரன்கள் (1998-99)
5. வாசிம் ஜாஃபர் - 1260 ரன்கள் (2008-09)

ரஞ்சி போட்டியில் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள்

ருசி மோடி
டபிள்யூவி ராமன்
அஜய் சர்மா
ராமன் லம்பா
வி பரத்வாஜ்
ஜே மார்டின்
எஸ் ஸ்ரீராம்
விவிஎஸ் லஷ்மண்
ஜாதவ்
ரஹானே
வாசிம் ஜாஃபர்
பிஸ்ட்
கேஎல் ராகுல்
காடிவாலே
ஜாதவ்
ஸ்ரேயாஸ் ஐயர்
பஞ்சல்
மயங்க் அகர்வால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com