300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து!

சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்...
300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து!

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த இலங்கை, 49.3 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமல் 61 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் இறுதி விக்கெட்டாக இலங்கையின் லாஹிரு கமகேவை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 300-ஆவது விக்கெட்டாகும். இந்த இலக்கை அவர் தனது 54-ஆவது போட்டியில் எட்டியுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

முன்னதாக, 1981-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லிலீ 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிவேகமாக இருந்தது. இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் அந்த சாதனையை தகர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் முத்தையா முரளிதரன் (58 டெஸ்ட்), ரிச்சர்ட் ஹேட்லீ (61), டேல் ஸ்டெய்ன் (61) ஆகியோர் அஸ்வினை பின் தொடருகின்றனர்.

சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறியதாவது: 300 கிளப்பில் இணைந்துள்ள அஸ்வினுக்குப் பாராட்டுகள். தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் அஸ்வின் 5-ஆவது வீரர் ஆவார். இப்பட்டியலில் அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாஹீர் கான் (311) ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com