கடந்த 61 வருடங்களில் மிக மோசமான சீசன்: தோல்வியுடன் ரஞ்சியிலிருந்து வெளியேறியது தமிழக அணி!

கடந்த 61 வருடங்களில் மிக மோசமான சீசன்: தோல்வியுடன் ரஞ்சியிலிருந்து வெளியேறியது தமிழக அணி!

பரோடாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தமிழக அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இதையடுத்து கடந்த 61 வருடங்களில் மிக மோசமான சீசனை...

பரோடாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தமிழக அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இதையடுத்து கடந்த 61 வருடங்களில் மிக மோசமான சீசனை சந்தித்து இவ்வருட ரஞ்சி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

தமிழகம் - பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா முதல் இன்னிங்ஸில் 98.1 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 95.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் முன்னிலை பெற்ற பரோடா, 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு 233 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தமிழக அணி, 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பரோடா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றது. தமிழக அணியில் பாபா அபரஜித் மட்டும் பொறுப்புடன் விளையாடி 60 ரன்கள் எடுத்தார். நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனதால் மோசமான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. 

2017-18 ரஞ்சிப் போட்டியில் தமிழக அணி

ஆட்டங்கள் - 6
வெற்றி - 0
தோல்வி - 1
டிரா - 5

1934-35 முதல் 1955-56 வரையிலான 21 வருட ரஞ்சி சீசன்களில் தமிழக அணியால் 8 வருட சீசன்களில் ஒரு வெற்றிகூட பெறமுடியாமல் போனது. ஆனால் 1955-56க்குப் பிறகு கடந்த வருடம் வரை ரஞ்சி போட்டியில் குறைந்தது ஒரு வெற்றியையாவது தமிழக அணி பெற்றுவிடும். இதன் அடிப்படையில் கடந்த 61 வருடங்களில் இந்த வருடம் தான் தமிழக அணியால் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை என்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

சி பிரிவில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணி, 11 புள்ளிகளுடன் 5-வது இடம் பெற்றுள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறாமல் இந்த வருட ரஞ்சி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

கடந்த வருடம் தமிழக அணி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் இந்த வருடம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறமுடியாமல் போனது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த வருடம் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த், விஜய் சங்கர் என இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தமிழக அணி சார்பாக ரஞ்சி போட்டிகளில் விளையாடினார்கள். இருப்பினும் தமிழக அணியால் மற்ற அணிகளைப் போல வெற்றிகளைப் பெறமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com