Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: பஞ்சாப் வீரர் சித்தார்த் கௌல் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: பஞ்சாப் வீரர் சித்தார்த் கௌல் தேர்வு

    By DIN  |   Published on : 29th November 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sidharth

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக ஏ அணியில் விளையாடிய அனுபவம் பெற்றவரான பந்துவீச்சாளர் சித்தார்த் கௌல் (27) இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான சித்தார்த், கடந்த 2008-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கேப்டன் கோலி தலைமையில் விளையாடி இருக்கிறார். அந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. சித்தார்த், கடைசி ஓவரை மிகச் சிறப்பாக வீசி சொற்ப ரன்களை மட்டுமே எதிரணிக்கு விட்டுக் கொடுத்தார். 
    இதற்காக கேப்டன் கோலியிடம் அப்போதே பாராட்டுகளை அள்ளியவர் சித்தார்த்.
    ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் விளையாடியிருக்கிறார்.
    தேநீர் இடைவேளையில் இன்ப அதிர்ச்சி: ரஞ்சி கோப்பைக்காக பஞ்சாப் அணியில் சித்தார்த் விளையாடி வருகிறார்.
    சர்வீஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி கடந்த திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, தேநீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது, ஆட்ட நடுவர் சதுர்வேதி மூலமாக அவர், இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டது.
    இதை கேட்டவுடன் தனக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டதாக சித்தார்த் தெரிவித்தார்.
    இந்திய அணிக்குத் தேர்வானது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
    யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்கள் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் ரோல் மாடல்.
    இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. எனது ஆட்டத்திறன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். 
    ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன் என்றார் சித்தார்த் கௌல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai