Enable Javscript for better performance
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: புஜாரா 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: புஜாரா 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

    By DIN  |   Published on : 29th November 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pujara

    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் புஜாரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டன் விராட் கோலி 5-ஆவது இடத்தில் உள்ளார்.
    இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை புஜாரா வெளிப்படுத்தியிருந்தார். இதன்மூலம், 22 புள்ளிகள் பெற்றார்.
    தற்போது, தரவரிசைப் பட்டியலில் புஜாரா 888 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 941 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.
    மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன்மூலம், ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
    எனினும், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், 877 புள்ளிகளுடன் அவர் 5-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார்.
    ஐசிசி ஒரு நாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், கோலியைவிட புஜாரா 11 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளார்.
    இந்திய அணியின் முரளி விஜய் 8 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 7 இடங்கள் முன்னேறி 46-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
    இந்தப் பட்டியலில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
    முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இரண்டாவது இன்னிங்ஸிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
    சிறப்பான ஆட்டத்தை ஸ்டீவ் வெளிப்படுத்தியதால், 5 புள்ளிகள் அதிகம் பெற்று 941 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    இந்தியாவின் கே.எல். ராகுல் ஓரிடம் கீழிறங்கி 9-ஆவது இடத்திலும், ரஹானே 15-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    4-ஆவது இடத்தில் அஸ்வின்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 880 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் 849 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    இந்தப் பட்டியலில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் 28-ஆவது இடத்திலும், இஷாந்த் சர்மா 30-ஆவது இடத்திலும் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai