ரஞ்சி போட்டியில் சொதப்பிய முகுந்த்! இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக வாய்ப்புண்டா?

இந்த வருட ரஞ்சி போட்டியில், அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்களில் மூன்று பேர் தொடக்க வீரர்கள்...
ரஞ்சி போட்டியில் சொதப்பிய முகுந்த்! இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக வாய்ப்புண்டா?

9 இன்னிஸில் 247 ரன்கள். சராசரி 30.87.

இதுதான் இந்த வருட ரஞ்சி போட்டியில் அபினவ் முகுந்த் எடுத்த ரன்கள்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழக அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி வீழ்த்தியது. இதனால், லீக் சுற்று ஆட்டத்துடன் தமிழகம் வெளியேறிவிட்டது. 'சி' பிரிவில் 6 ஆட்டங்களில் விளையாடிய தமிழகம் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அந்தப் பிரிவில் 11 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் தமிழகம் வெளியேறியது.

தமிழக அணியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணம், பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடாததுதான். தமிழக அணியின் மூத்த வீரரும் அணியின் கேப்டனுமான 27 வயது முகுந்த், 6 போட்டிகளில் 2 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

கடந்த வருட ரஞ்சி போட்டியில் நான்கு சதங்கள் உள்ளிட்ட 849 ரன்கள் எடுத்ததால் இந்திய அணிக்குத் தேர்வானார் முகுந்த். விஜய், தவன் ஆகியோருக்கு மாற்று தொடக்க வீரராக அணிக்குள் நுழைந்த முகுந்த், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தலா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 0, 16 என மோசமாக விளையாடிய முகுந்த், இலங்கைக்கு எதிராக 12, 81 ரன்கள் எடுத்தார். இதனால் மீண்டும் மாற்று வீரராக அவர் தேர்வாகும் வாய்ப்பு இருந்தது.

ஏற்கெனவே இந்திய அணியில் விஜய், தவன், ராகுல் என மூன்று வீரர்கள் இரு தொடக்க வீரர்களுக்கான இடங்களுக்குப் பலமாகப் போட்டியிடுகிறார்கள். இதில் முகுந்த் மோசமாக விளையாடியிருப்பது அவருக்கு எவ்விதத்திலும் நன்மை அளிக்கப்போவதில்லை. 

இந்த வருட ரஞ்சி போட்டியில், லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்களில் கர்நாடகாவின் மயங்க் அகர்வால், விதர்பாவின் ஃபயஸ் ஃபஸல் மற்றும் சஞ்சய் ராமசாமி என மூன்று பேர் தொடக்க வீரர்கள். இதுதவிர மும்பையின் பிருத்வி ஷாவும் ரஞ்சியில் கவனம் ஈர்த்துள்ளார். இவர்களில் மயங்க் அகர்வாலும் பிருத்வி ஷாவும் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. தேர்வுக்குழு, இருவரையும் இந்திய ஏ அணியில் விளையாடச் செய்து மேலும் பரிசோதித்துப் பார்க்கும். 

முகுந்த், கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஓரளவு ரன்கள் குவித்தது அவருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தினாலும் ரஞ்சி போட்டியில் மோசமாக விளையாடியிருப்பதைத் தேர்வுக்குழு கவனிக்காமல் இருக்காது. இது எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும். 

முகுந்த் வசம் வயது உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது அவர் இந்திய அணியின் கதவைத் தட்டலாம். எனவே அடுத்த வருட ரஞ்சி போட்டியில் இழந்த ஃபார்மை அவர் மீட்டுக்கொண்டுவரவேண்டும். காலத்தின் கட்டாயம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com