Enable Javscript for better performance
வரலாறாகிறதா சச்சினின் ஜெர்ஸி எண்?- Dinamani

சுடச்சுட

    
    sachin

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அடையாளமான ஜெர்ஸி எண் 10-ஐ வேறு எந்த இந்திய வீரர்களும் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில், அந்த எண் வரலாறாகத் தொடரும் நிலை உள்ளது.
    சச்சினுக்கான கெளரவமாக அவருக்கென அந்த எண்ணை விடுவிக்க எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் வேறு எந்த வீரர்களும் அந்த எண்ணை பெற முன்வரவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
    கடந்த 1989-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக களம் காண்டார் சச்சின். அப்போது, 10-ஆம் எண்ணை தனது அடையாளமாக ஜெர்ஸியில் பதிந்துகொண்டார். அன்றுமுதல் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது கடைசி போட்டி வரையில் அவர் அந்த எண் ஜெர்ஸியிலேயே ஆடி வந்தார்.
    அவருக்குப் பிறகு இந்திய அணியில் எந்தவொரு வீரரும் 10-ஆம் எண் கொண்ட ஜெர்ஸியை தேர்வு செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களம் கண்ட ஷர்துல் தாக்குர், 10-ஆம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து ஆடினார்.
    அதற்காக சமூக வலைதளங்கலில் அவர் கடுமையான கேலிகளை சந்தித்தார். பின்னர், தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பதன் காரணமாக எண் கணித அடிப்படையில் அந்த ஜெர்ஸியை தேர்வு செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். அதன் பின்னர் தற்போது வரையில் எந்த இந்திய வீரர்களும் '10'-ஆம் எண் ஜெர்ஸியை தனதாக்கிக் கொள்ள முன்வரவில்லை.
    இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    ஒவ்வொரு வீரரும் தனக்கான ஜெர்ஸி எண்ணை தேர்வு செய்வதென்பது, அவரது தனிப்பட்ட விருப்பமாகும்.
    ஒரு வீரர் ஓய்வுபெறும்போது அவரது ஜெர்ஸி எண்ணை, அவருக்கென அர்ப்பணிக்கக் கூடாது என ஐசிசி கூறலாம். ஆனால், அவருக்குப் பிறகு அந்த எண்ணை கட்டாயம் ஏதேனும் ஒரு வீரர் ஏற்க வேண்டும் என ஐசிசி வற்புறுத்தாது. 10-ஆம் எண் ஜெர்ஸியை சச்சினுக்கென அர்பணிக்கும் எண்ணம் பிசிசிஐயிடம் இல்லை. அது வழக்கமும் அல்ல.
    அதேவேளையில், ஷர்துல் தாக்குர் தூற்றுதலுக்கு உள்ளானதுபோல் வேறு வீரர்களும் விமர்சனங்களை சந்திப்பதை விரும்பவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
    சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரரின் அடையாளமாக இருந்த எண்ணை அவருக்கான கெளரவமாக, அவருக்கே அர்ப்பணிக்கும் வழக்கம் இதுவரை இல்லை. எனினும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சச்சின் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த எண் ஜெர்ஸியை அவருக்கென அர்ப்பணித்துள்ளது.
    சர்வதேச கால்பந்திலும் எண் அடையாளங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளன. எனினும், எந்தவொரு வீரருக்குமாக ஜெர்ஸி எண்ணை அர்பணிப்பதை ஃபிஃபாவும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai