யுவராஜுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்குக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வியாழக்கிழமை கௌரவித்தது.
யுவராஜுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் யுவராஜ் சிங். அதிரடி பேட்டிங், மின்னல் வேக ஃபீல்டிங், சிக்கன பந்துவீச்சு என அனைத்திலும் ஜொலிப்பவர்.

இந்திய அணி 2007 டி20 மற்றும் 2011 50 ஓவர் என இரு உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பல முக்கிய கோப்பைகளை வெல்லவும் உதவியாக இருந்தார்.

2011-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரின் போது அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருது பெற்றார்.

பின்னர் அதிலிருந்து மீண்டு அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார். அதுமட்டுமல்லாமல் யூவிகேன் என்ற அமைப்பை கடந்த 2012-ல் தொடங்கி புற்றுநோயால் பாதிக்கப்படும் பலருக்கு உதவி புரிந்து வருகிறார்.

சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் சேர்த்து இதுவரை 400 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்துக்கும் மேலான ரன்களைக் குவித்துள்ளார். 

தற்போது உள்ள இளம் தலைமுறை வீரர்களுக்கும் கடும் சவாலாக இருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறந்த விளையாட்டு திறன் மற்றும் தன்மானம் மிகுந்த மனித்தத்தன்மையுடைய மாற்றங்களை விரும்பக்கூடிய தன்மையை பாராட்டும் விதமாக குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகம் யுவராஜ் சிங்குக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

டாக்டர் பட்டத்தால் என்னை கௌரவித்தமைக்கு மிக்க நன்றி. இது எனது பணியை மேலும் சிறப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் எனக்கு தற்போது முதல் கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் இந்த பாராட்டுதலுக்கும், கௌரவத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தும் விதமாக முன்மாதிரியாகச் செயல்படுவேன். இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் யுவராஜ் சிங்குடன் சேர்த்து மேலும் 6 பேருக்கு அந்தப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com