ஆசியப் போட்டி 2018: நீச்சலில் இந்தியாவின் பதக்க வறட்சி நீங்குமா?

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் நீச்சலில் இந்தியாவின் பதக்க வறட்சி இந்த முறை நீங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசியப் போட்டி 2018: நீச்சலில் இந்தியாவின் பதக்க வறட்சி நீங்குமா?


ஜகார்த்தா ஆசியப் போட்டியில் நீச்சலில் இந்தியாவின் பதக்க வறட்சி இந்த முறை நீங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் ஒவ்வொரு நாட்டின் பதக்க பட்டியலை கணிசமாக உயர்த்துவதில் நீச்சலுக்கும் பெரும் பங்குள்ளது. 
உடலின் அனைத்து பகுதிகளையும் வலுப்படுத்தி, சிறந்த உடற்பயிற்சியாக திகழும் நீச்சலில் பாரம்பரியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பலம் பொருந்தியவையாக திகழ்கின்றன.
ஆசியாவைப் பொறுத்தமட்டில் சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் வீரர்கள் நீச்சலில் சிறந்து விளங்குகின்றனர். அதே நேரத்தில் நீச்சலை பொறுத்தவரை இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை. நீச்சலில் பிரசித்தி பெற்ற பெரிய வீரர், வீராங்கனைகள் இல்லாததும் குறைபாடாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை எந்த பதக்கமும் கிடைத்ததில்லை. அதே நேரத்தில் ஆசிய போட்டிகளில் அத்திபூத்தார் போல் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில் வரும் 18-ஆம் தேதி முதல் ஜாகர்த்தாவில் 18-ஆவது ஆசிய போட்டிகள் தொடங்குகின்றன. 

சந்தீப்-விர்த்வால்:

நீச்சல் போட்டிகள் 19-ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் இந்திய வீரர்கள் சாஜன் பிரகாஷ், விர்த்வால் காடே, சந்தீப் சேஜ்வால், ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் முறையே 50 மீ பேக்ஸ்ட்ரோக், 200 மீ ப்ரீஸ்டைல், 200 மீ பட்டர்பிளை, 100 மீ. பேக்ஸ்ட்ரோக் போன்ற பிரிவுகளில் களம் காண்கின்றனர்.
இதில் காமன்வெல்த் போட்டியில் 50 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு ஸ்ரீஹரி நடராஜ் முன்னேறினார். ஆசியப் போட்டியில் சிறப்பாக செயல்படுவதின் மூலம் அவர் எதிர்கால நட்சத்திரம் என்பதை உறுதிப்படுத்தலாம். நூலிழையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. மூன்றாவது நாளில் 50 மீ. ப்ரீஸ்டைல், 400 மீ. ப்ரீஸ்டைல், மறறும் 200 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் போன்ற பிரிவுகளில் சாஜன் பிரகாஷ், சந்தீப் சேஜ்வால் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
மேலும் 100 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக், 100 மீ. பட்டர்பிளை, 4-100 மீ. ப்ரீஸ்டைல் ரிலே, 4-100 மீ தனிநபர் மெடலி பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக 50 மீ. பட்டர்பிளை பிரிவில் விர்த்வால் காடே கடந்த 2010 குவாங்ஷு ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 
அதே போல் 50 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் சந்தீப் சேஜ்வால் கடந்த 2014 இன்சியான் ஆசியப் போட்டியில் வென்றகம் வென்றார். இதன் மூலம் ஆசியப் போட்டி நீச்சலில் பதக்கம் வென்ற 9-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய நீச்சல் அணி:

விர்த்வால் காடே, (ப்ரீஸ்டைல், பட்டர்பிளை), சந்தீப் சேஜ்வால் (பிரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்பிளை), சாஜன் பிரகாஷ் (ப்ரீஸ்டைல், பட்டர்பிûளை), ஸ்ரீஹரிநடராஜ் (பேக்ஸ்ட்ரோக்), அன்ஷுல் கோத்தாரி (ப்ரீஸ்டைல், பட்டர்பிளை), அத்வைத் பேஜ், ஆரோன் ஏஞ்சல், அர்விந்த் மணி, செளரவ் சங்வேகர், அவினாஷ் மணி, நீல் ராய், சுப்ரியா சாருஸியா.

ஆசியப் போட்டியில் வாய்ப்புகள் குறித்து சந்தீப் சேஜ்வால் கூறியதாவது:

முன்பை விட நான் தற்போது அதிக ஊக்கத்துடன் உள்ளேன். கடந்த 8 மாதங்களாக நீச்சலில் பங்கேற்கவில்லை. 8 ஆண்டுகளாக ஓரே நேரத்திலேயே எனது செயல்பாடு இருந்தது. பயிற்சியாளர் நிஹார் அளித்த ஊக்கத்தால் மீண்டும் களம் கண்டேன். கடந்த 4 ஆண்டுகளில் நிறைய மாறி விட்டது. விர்த்வால் காடேவும், நானும் இணைந்து 3 ஆண்டுகளாக ஓரே அணியில் இடம் பெறுகிறோம். இருவரும் இணைந்து செயல்பட்டால் பதக்கம் வெல்லும் கண்டிப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com