ஷூட் அவுட்டில் த்ரில் வெற்றி: உலகக்கோப்பையில் முதன்முறையாக தங்கம் வென்றது பெல்ஜியம் 

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து பெல்ஜியம் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
புகைப்படம்: டிவிட்டர்/ஹாக்கி வோர்ல்ட் கப் 2018-ஹோஸ்ட் பார்ட்னர்
புகைப்படம்: டிவிட்டர்/ஹாக்கி வோர்ல்ட் கப் 2018-ஹோஸ்ட் பார்ட்னர்


உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து பெல்ஜியம் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதின. 

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெல்ஜியம் அணிக்கு நெருக்கடி அளித்தது. எனினும், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்கவில்லை. இதையடுத்து, 2-ஆவது பாதி ஆட்டத்தில் எழுச்சி கண்ட பெல்ஜியம் அணி நெதர்லாந்துக்கு பதிலடி தந்தது. இருப்பினும், கோல் கணக்கு தொடங்கவில்லை. குறிப்பாக பெல்ஜியம் அணி கடைசி 10 நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கடுமையான நெருக்கடி அளித்தது. இருப்பினும், போட்டியின் முழு நேரம் முடியும் வரை ஒரு கோல் கூட போகவில்லை.

போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், பெல்ஜியம் அணியினர் அதனை சிறப்பாக தடுத்தனர். அதேசமயம், பெல்ஜியம் அணி ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைக் கூட பெறவில்லை. 

இதையடுத்து, போட்டியின் முடிவில் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. ஷூட் அவுட்டில் நெதர்லாந்து அணி தனது 5 வாய்ப்புகளில் 2 கோல்கள் அடித்தது. அந்த அணிக்காக ஜேரோன் ஹெர்ட்ஸ்பெர்கர் மற்றும் ஜோனாஸ் டி கியூஸ் ஆகியோர் கோல் அடித்தனர். 

பெல்ஜியம் அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் 2 கோல் அடித்திருந்தது. இதையடுத்து, கடைசி வாய்ப்பில் கோல் அடித்தால் உலகக்கோப்பை சாம்பியன் என்ற நிலை இருந்தது. அதனால் பெல்ஜியம் வீரர் அர்தூர் டி ஸ்லூவர் கோல் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதன்படி, அவரும் கோல் அடித்தார். இதனால், பெல்ஜியம் வீரர்கள் சாம்பியம் பட்டம் வென்றது போல் துள்ளிக் குதித்தனர். 

கடைசி நேரத்தில் டிவிஸ்ட்:

ஆனால், கடைசி கோலின் போது பந்து காலில் பட்டதாக நெதர்லாந்து கோல் கீப்பர் ரிவியூ கேட்டார். ரிவியூவில் பந்து டி ஸ்லூவர் காலில் பட்டது தெரியவந்தது. இதனால், கடைசி கோல் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதனால், ஷூட் அவுட்டும் 2-2 என சமனில் முடிந்தது. 

இதையடுத்து, சடன் டெத் எனும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், பெல்ஜியம் வீரர் ஃப்ளோரெண்ட் வான் அவ்பெல் கோல் அடித்து பெல்ஜியம் அணியை முன்னிலை பெறச் செய்தார். இதையடுத்து, கோல் அடித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் நெதர்லாந்து வீரர் ஜேரோன் ஹெர்ட்ஸ்பெர்கர் இருந்தார். இந்த கடைசி வாய்ப்பில் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. 

இதன்மூலம், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பெல்ஜியம் அணி ஒருவழியாக 3-2 என வெற்றியைப் பெற்று முதன்முறையாக உலகக்கோப்பையில் தங்கம் வென்றது. நெதர்லாந்து கோல் கீப்பர் பிர்மின் பிளாக் பெல்ஜியம் கோல் முயற்சிகளை 4 முறை மட்டுமே தடுத்தார். பெல்ஜியம் கோல் கீப்பர் வின்சென்ட் வனாஷ் நெதர்லாந்து கோல் முயற்சிகளை 5 முறை (நெதர்லாந்தை விட கூடுதலாக ஒரு முறை) தடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

நெதர்லாந்தில் நடைபெற்ற கடந்த உலகக்கோப்பையில் பெல்ஜியம் அணி 5-ஆவது இடத்தையே பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com