உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன்: வரலாற்றுத் தங்கம் வென்றார் சிந்து

சீனாவில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன்: வரலாற்றுத் தங்கம் வென்றார் சிந்து

சீனாவில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான சிந்து, உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவரும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக ஒரு மணி நேரம், 2 நிமிடங்களுக்கு நீடித்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
இந்தத் தங்கத்தை தட்டிச் சென்றதன் மூலம், தனது தொடர் இறுதிச்சுற்று தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிந்து. அவர் விளையாடிய கடந்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக இறுதிச்சுற்று வரை முன்னேறி தோல்வியடைந்திருந்தார்.
தொடர்ந்து 3-ஆவது முறையாக உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியில் பங்கேற்ற சிந்து, கடந்த சீசனில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் தோல்வி கண்டிருந்தார். சிந்து தற்போது வென்றுள்ள இந்தப் பட்டம் அவரது பாட்மிண்டன் வாழ்வில் 14-ஆவது பட்டமாகும். எனினும், இந்த ஆண்டில் அவருக்கு இது முதல் சாம்பியன் பட்டம்.
நஜோமிக்கு எதிரான இறுதிச்சுற்றில், பல்வேறு முக்கியமான தருணங்களில் சாதுர்யமாக விளையாடிய சிந்து, ஆட்டம் முழுவதுமாகவே முன்னிலையில் இருந்தார். முதல் கேமில் நஜோமி இரு தவறுகள் செய்ய, சிந்து முன்னிலை பெற்றார். 
சிந்து 7-3 என முன்னிலை வகிக்க, விடாது துரத்திய நஜோமி அதை 5-7-ஆகக் குறைத்தார். பின்னர் நீண்ட ரேலியின் மூலமாக 11-6 என தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் சிந்து. ஒரு கட்டத்தில் 6-14 என பின்தங்கிய நஜோமி, ஆக்ரோஷமாக மீண்டு 16-16 என சமன் செய்தார்.
எனினும், அவர் மீண்டும் செய்த இரு தவறுகளால் முதல் செட் சிந்துவின் வசமானது. 2-ஆவது செட்டில் இருவரிடையே நீண்ட ரேலிக்கள் அதிகம் தொடர்ந்தன. நஜோமி கேம்களை சமன் செய்தபோதும், அவர் முன்னிலை பெறாமல் பார்த்துக் கொண்டார் சிந்து. 
2-ஆவது செட்டின் கேம்களில் 9-11, 12-13, 16-17 என மிக நெருக்கமாகவே சிந்துவை பின்தொடர்ந்தார் நஜோமி. பின்னர் சிந்து தனது அதிரடி ஆட்டத்தால் தொடர்ந்து புள்ளிகளை வென்று அந்த செட்டையும் வசமாக்கினார்.
"இனி எவரும் கேள்வி எழுப்ப இயலாது'
வெற்றிக்குப் பிறகு பேசிய சிந்து, "மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடர்ச்சியான இறுதிச்சுற்று தோல்விகளுக்குப் பிறகு பெற்றுள்ள முதல் வெற்றி என்பதால் இது நினைவில் நிற்கும். இந்த சாம்பியன் பட்டத்தால் 2018-ஆம் ஆண்டு சிறப்பாக நிறைவடைகிறது.
இறுதிச்சுற்று தோல்விகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், இனி அதற்கு வாய்ப்பு இல்லை என்று நம்புகிறேன். நஜோமி, யமாகுசி போன்றோருக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருப்பதில்லை. இந்த இறுதிச்சுற்றிலும் 30-40 ஷாட்கள் அடங்கிய ரேலிக்கள் நீடித்தன.
இது சிறப்பான, அதேவேளையில் கடினமான ஆட்டமாக இருந்தது' என்றார்.

ரூ.10 லட்சம் பரிசு

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த சிந்துவுக்கு, 
இந்திய பாட்மிண்டன் சங்கம் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இதே போட்டியில் முதல் முறையாக பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் சமீர் வர்மாவுக்கு ரூ.3 லட்சம் பரிசும் 
வழங்கப்படவுள்ளது.


வாழ்த்து...

சாதனையுடன் பட்டம் வென்றுள்ள சிந்துவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி,   
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் 
சந்திரசேகர் ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com