முதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது பெல்ஜியம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி "ஷூட் அவுட்' முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.  
முதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது பெல்ஜியம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி "ஷூட் அவுட்' முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.   பெல்ஜியம் அணி உலகக் கோப்பை வெல்வது இது முதல் முறையாகும். அத்துடன், அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதும் இதுவே முதல்முறையாகும்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டம் கோல்கள் இன்றி "டை' ஆனது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க "ஷூட் அவுட்' முறையில் இரு அணிகளுக்கும் தலா 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் நெதர்லாந்துக்கு 2 கோல் வாய்ப்புகளே வழங்கிய பெல்ஜியம், 3 கோல்கள் அடித்து வென்றது. "ஷூட் அவுட்' வாய்ப்பில் பெல்ஜியம் அணியில் ஃப்ளாரென்ட் வான் அபெல் 2 கோல்களும், விக்டர் வெக்னெஸ் ஒரு கோலும் அடித்தனர். நெதர்லாந்து தரப்பில் ஜோனஸ் டி கெஸ், ஜெரோன் ஹெர்ட்ஸ்பெர்கர் தலா ஒரு கோல் அடித்தனர்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம் அணி, 2-ஆவது பெருமையாக உலகக் கோப்பையில் தற்போது மகுடம் சூடியுள்ளது. அத்துடன், உலகக் கோப்பையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்யும் நெதர்லாந்தின் கனவையும் தகர்த்துள்ளது பெல்ஜியம். 
பெல்ஜியம் அணி கடந்த சீசனில் 5-ஆவது இடம் பிடித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளது. மறுபுறம் 3 முறை உலக சாம்பியனான நெதர்லாந்து, கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் வெள்ளிப் பதக்கம் வென்றது. ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் "ஷூட் அவுட்' முறையில் வென்றிருந்த நெதர்லாந்து, இறுதி ஆட்டத்தின் "ஷூட் அவுட்' முறையில் தோல்வி கண்டது.

ஆஸ்திரேலியாவுக்கு வெண்கலம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பந்தாடி வென்றது.
2014-ஆம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கம் வெல்வது இது 5-ஆவது முறையாகும். அதேபோல், உலகின் 7-ஆம் நிலை அணியான இங்கிலாந்து தொடர்ந்து 3-ஆவது முறையாக 4-ஆம் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக கடந்த 1994-ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
ஆட்டத்தின் முதல் கோலை அந்த அணியின் பிளேக் கோவர்ஸ் 8-ஆவது நிமிடத்தில் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஃபீல்டு கோல் அடித்த டாம் கிரெய்க், 19-ஆவது நிமிடத்திலும் மீண்டும் ஒரு ஃபீல்டு கோலடித்தார். இதனால் முதல் பாதி முடிவிலேயே ஆஸ்திரேலியா 3-0 என முன்னிலை பெற்றது.
பிற்பாதி ஆட்டத்தில் 32-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை டிரென்ட் மிட்டன் அருமையான கோலாக மாற்றினார். 34-ஆவது நிமிடத்தில் டிம் பிரான்ட் மற்றும் டாம் கிரெய்க் ஆகியோர் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து ஆஸ்திரேலியாவை 5-0 என முன்னிலைப்படுத்தினர்.
மறுபுறம், தொடக்கம் முதல் போராடி வந்த இங்கிலாந்துக்கு ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் முதலும், கடைசியுமான கோல் வாய்ப்பு கிடைத்தது. அணியின் பேரி மிடில்டன் அதை ஃபீல்டு கோலாக அடித்தார். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் 57 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இரண்டையுமே தவறாமல் கோலாக்கினார் ஜெரிமி ஹேவர்ட். இவ்வாறாக இறுதியில் 8-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com