ஐபிஎல் ஏலத்தில் என்னை யாரும் சீந்தாதது ஏன்?: வேதனையை வெளிப்படுத்தும் மனோஜ் திவாரி!

இந்த ஐபிஎல் போட்டியில் நான் பங்கேற்கவில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை...
ஐபிஎல் ஏலத்தில் என்னை யாரும் சீந்தாதது ஏன்?: வேதனையை வெளிப்படுத்தும் மனோஜ் திவாரி!

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. ஐபிஎல் 12 வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. 8 அணிகள் சார்பில் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. 

இந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்கால் வீரரான மனோஜ் திவாரியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் ட்விட்டரில் அவர் வெளிப்படுத்தினார். அதில் அவர் கூறியதாவது: 

என் நாட்டுக்காகச் சதமடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்று, அதன்பிறகு அடுத்த 14 ஆட்டங்களுக்கு நான் தேர்வாகவில்லை. இதில் என் பக்கம் என்ன தவறு? 2017 ஐபிஎல் ஆட்டங்களில் வாங்கிய விருதுகளைப் பார்க்கும்போது என்ன தவறு ஏற்பட்டது என வியக்கிறேன். 

இந்த ஐபிஎல் போட்டியில் நான் பங்கேற்கவில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் உண்மையை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். எனினும் குறிப்பிட்ட விவகாரங்களில், அனுபவங்களில் என் கருத்தைச் சொல்லாமல் இருக்கமாட்டேன். என்னை விமரிசிப்பவர்களுக்கு, என் நிலையில் இருந்துகொண்டு அதுபோன்ற கருத்தைச் சொல்லுங்கள். எனக்கு நேர்ந்தது எதுவும் மற்றவர்களுக்கு நேர்ந்ததில்லை. அதுகுறித்து வருங்காலத்தில் நிச்சயம் சொல்வேன் என்று கூறியுள்ளார்.  

2018 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி, 5 ஆட்டங்களில் இடம்பெற்ற 33 வயது மனோஜ் திவாரி, 47 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் 2017 ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் விளையாடி, 2 அரை சதங்கள் உள்ளிட்ட 324 ரன்கள் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com