தவறு செய்ய என்னை ஊக்கப்படுத்தினார் டேவிட் வார்னர்: பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து பான்கிராஃப்ட் பேட்டி

பந்தைச் சேதப்படுத்த முடியாது என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அடிக்கடிக் கேட்டுக் கொள்வேன்...
தவறு செய்ய என்னை ஊக்கப்படுத்தினார் டேவிட் வார்னர்: பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து பான்கிராஃப்ட் பேட்டி

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தவறு செய்ய டேவிட் வார்னர் ஊக்கப்படுத்தியதாக ஆஸி. வீரர் பான்கிராஃப்ட் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளதாவது:

ஆட்டத்தின் அன்றைய சூழலில் அக்காரியத்தைச் செய்யச் சொன்னார் வார்னர். எனக்கு அதற்கு மேல் தெரியாது. என்னை அணியில் எப்படி மதிப்பிடுவார்கள் என்பதை எண்ணி அந்த முடிவை எடுத்தேன். அணிக்கு இணக்கமாக இருப்பதால் மரியாதை கிடைக்கும் என எண்ணினேன். தவறுக்கான விலை மிகப் பெரிதாகக் கிடைத்தது. பந்தைச் சேதப்படுத்த முடியாது என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அடிக்கடிக் கேட்டுக் கொள்வேன். அணியின் வெற்றிக்கு உதவாமல் இருந்தேன் என அப்போது எண்ணியிருப்பேன். என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தேர்வு செய்கிற வாய்ப்பு இருந்தது. மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று பான்கிராஃப்ட் பேட்டியளித்துள்ளார்.

கடந்த வருடம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. பயிற்சியாளர் டேரன் லேமன் பதவி விலகினார். இப்பிரச்னை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சையான குழுவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) நிர்வாகத்தைக் கடுமையாக சாடியிருந்தது. இதனால் சிஏ தலைவர் டேவிட் பீவர், சிஇஓ ஜேம்ஸ் சதர்லேண்ட், இயக்குநர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். அதன் தொடர்ச்சியாக அணி செயல்திறன் தலைவர் பேட் ஹோவர்ட். ஒளிபரப்பு இயக்குநர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகினார்கள்.  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் சார்பில் இந்தத் தடையை நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மூன்று வீரர்களின் தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது.

ஒன்பது மாத தடை முடிந்து டிசம்பர் 30 அன்று நடைபெறவுள்ள பிக் பாஷ் போட்டியில் பான்கிராஃப்ட் கலந்துகொள்ளவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com