உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைப் பறிக்கக் கூடாது: ஐசிசிக்கு பிசிசிஐ பதில்! 

மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை...
உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைப் பறிக்கக் கூடாது: ஐசிசிக்கு பிசிசிஐ பதில்! 

கடந்த 2016-இல் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இந்திய சட்டத்தின்படி வரித்தொகையை பிடித்தம் செய்து கொண்டு பிசிசிஐ, அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி உள்ளிட்டவை மீதித்தொகையை ஐசிசிக்கு செலுத்தின. மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதனால் ஐசிசி அதிருப்தி அடைந்தது. ஐசிசியின் தற்போதைய தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் உள்ளார். கடந்த அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இழப்பீடாக ரூ.160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அத்தொகையை பிசிசிஐ திருப்பித் தரவில்லை.

வரும் 31-ஆம் தேதிக்குள் பிசிசிஐ அத்தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் அவற்றை வேறிடத்துக்கு மாற்றி விடுவோம் என ஐசிசி எச்சரித்தது. பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏவுக்கு இதில் முடிவெடுக்க இன்னும் 10 நாள்களே உள்ளது. மேலும் இத்தொகையை தராவிட்டால், நிகழாண்டில் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய வருவாயில் இருந்து அத்தொகையை பிடித்தம் செய்வோம் எனவும் ஐசிசி தெரிவித்தது. 

ஐசிசியின் இந்தக் கடிதத்துக்கு பிசிசிஐ பதில் அளித்துள்ளது. 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை பிசிசிஐ-யிடமிருந்து பறிக்கக் கூடாது. வரிச்சலுகை வழங்கப்படும் என்கிற எந்தவொரு உத்தரவாதத்தையும் பிசிசிஐ அளிக்கவில்லை. அதற்காக முடிந்தவரை முயற்சி செய்வோம் என்றுதான் கூறப்பட்டது. வரிச்சலுகை பெறவேண்டியது ஐசிசி மற்றும் ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பு. வரிச்சலுகைக்கு இந்தியா பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தால் ஐசிசி கூட்டங்களில் அதுகுறித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com