Enable Javscript for better performance
இன்று தொடங்குகிறது குளிர்கால ஒலிம்பிக்- Dinamani

சுடச்சுட

    
    pye

    குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில், பியோங்சாங்கில் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட 'ஸ்னோபோர்ட்' பனிச்சறுக்கு வீரர்.

    தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
    வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அல்பென்சியா விளையாட்டுப் பூங்கா, காங்னியுங், போக்வாங், ஜியோங்சியான் ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
    இந்தியா...: இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவன், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் வீரர் ஜெகதீஷ் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    இதுகுறித்து, பியோங்சாங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் கூறியதாவது:
    போட்டிகள் நடைபெறவுள்ள விளையாட்டு கிராமத்தின் மேயரால் இந்திய அணிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது இந்திய தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. பியோங்சாங்கில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ் குளிர் உறைய வைக்கிறது.
    இந்திய வீரர்களில் ஷிவா கேசவன் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். ஜெகதீஷ் சிங் வெள்ளிக்கிழமை காலை தென் கொரியா வருகிறார் என்று ஹர்ஜிந்தர் சிங் கூறினார்.
    ஜெகதீஷ் சிங்குடன் பயணிக்கும் பயிற்சியாளர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர், ஷிவா கேசவன் உள்ளிட்டோருடனான இந்திய அணியுடன் கடந்த 4-ஆம் தேதியே தென் கொரியா வர இயலாமல் போனது. ஜெகதீஷ் சிங்கிற்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். ஜெகதீஷ் சிங்கின் போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இதனிடையே, தனது 6-ஆவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஷிவா கேசவன், இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். அவரது போட்டியின் ஹீட்ஸ் சுற்றுகள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 
    நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai