டி வில்லியர்ஸ் தெ.ஆ. அணிக்குப் பலம் சேர்ப்பாரா? இந்திய அணி சரித்திரம் படைக்குமா?

நாளைய ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்று சரித்திரம் படைக்குமா கோலி அணி?..
டி வில்லியர்ஸ் தெ.ஆ. அணிக்குப் பலம் சேர்ப்பாரா? இந்திய அணி சரித்திரம் படைக்குமா?

டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியதைப் போல, ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாளை ஜோகனாஸ்பர்க்கில் 4-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் விளாசியிருந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 2-ஆவது அதிகபட்ச ரன்கள். கடந்த 1-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் ஆட்டத்திலும், சென்சுரியனில் 4-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 6 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 

இந்தியாவுக்கான சாதகமாக, தென் ஆப்பிரிக்க அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களான டி வில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், குவின்டன் டி காக் ஆகியோர் காயம் காரணமாக இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இடம்பெறவில்லை.

காயத்தில் இருந்து மீண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கிறார். இந்த அறிவிப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. எனினும் நாளை நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸ் இடம்பெறுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. அவர் 4-வது ஆட்டத்தில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டி காக் தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளனர்.

இன்றைய வலைப்பயிற்சி முடிந்தபிறகு டி வில்லியர்ஸ் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. 

இந்திய அணியைப் பொறுத்தவரையில், மிடில் ஆர்டருக்கு கோலி மிகப்பெரிய பலம் சேர்க்கிறார். இந்த ஒருநாள் தொடரில் இரு சதங்கள் உள்பட 318 ரன்கள் குவித்துள்ளார். தவன்-ரோஹித் கூட்டணி நாளை நடைபெறும் ஆட்டத்திலாவது அருமையான தொடக்கத்தை தருவார்கள் என எதிர்பார்க்கலாம். 3 ஆட்டங்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரோஹித். எனினும் தவன் சிறப்பாக ஆடி இரு அரை சதங்கள் உள்பட 162 ரன்கள் எடுத்துள்ளார். சுழற்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரர்களைத் திணறடிக்க யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஷ்வர் உள்ளிட்டோரும் தயாராக உள்ளனர்.

முதல் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சிலேயே தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிந்தன. மூன்று ஆட்டங்களிலுமாக யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் மொத்தம் 21 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத் தீவிரமாக கருத்தில் கொண்ட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், இன்றைய வலைப் பயிற்சியின்போது 5 சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி எடுத்துவருகிறார்கள். 

கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதே நிலை தொடரும் நிலையில், இந்தத் தொடரும் நாளைய ஆட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது. நாளைய ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்று சரித்திரம் படைக்குமா கோலி அணி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com