டெஸ்ட்: முதல் நாள் மதிய உணவு இடைவேளை - தென் ஆப்பிரிக்கா 78/0

முதல்நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள்...
டெஸ்ட்: முதல் நாள் மதிய உணவு இடைவேளை - தென் ஆப்பிரிக்கா 78/0

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல்நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. டந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, முதல் டெஸ்டில் தோற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சஹாவுக்குப் பதிலாக பார்தீவ்
படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். தவனுக்குப் பதிலாக ராகுலும் புவனேஸ்வருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

புவனேஸ்வர் குமார் கடைசியாக விளையாடிய இரு டெஸ்டுகளிலும் பிரமாதமாகப் பங்களிப்பு செய்துள்ளார். கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளும் எடுத்தார். எனினும் அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் குமார், சஹா நீக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சமூகவலைத்தளங்களில் கோலியின் முடிவுகளுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட் நிபுணர்களுக்கும் கோலியின் விந்தையான இந்த முடிவுகள் வியப்பை அளித்துள்ளன.

ஆனால் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணியால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. டீன் எல்கரும் எய்டன் மார்க்ரமும் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் திட்டங்களை முறியடித்தார்கள். புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக அணியில் நுழைந்த இஷாந்த் சர்மா அற்புதமாகப் பந்துவீசி ரன்களையும் கட்டுப்படுத்தினார். ஷமி மிகவும் ஏமாற்றினார். 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்ததால் அவருக்கு அதிக ஓவர்கள் அளிக்கப்படவில்லை. ஐந்து பந்துவீச்சாளர்கள் முயன்றும் விக்கெட் எடுக்கமுடியவில்லை. நடுவில் எல்கர் கொடுத்த கேட்சை விஜய் தவறவிட்டார்.

இதனால் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 51, எல்கர் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com