வெளியேறியது ஆர்ஜென்டீனா: காலிறுதியில் பிரான்ஸ்

பரபரப்பாக நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 4-3 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு
வெளியேறியது ஆர்ஜென்டீனா: காலிறுதியில் பிரான்ஸ்

பரபரப்பாக நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 4-3 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டமாக ஆர்ஜென்டீனா-பிரான்ஸ் அணிகள் ஆட்டம் சனிக்கிழமை இரவு கஸான் மைதானத்தில் நடைபெற்றது.
இரு அணிகளும் இதுவரை 12 முறை மோதியுள்ள நிலையில் ஆர்ஜென்டீனா 6 வெற்றி, 2 டிராவுடன் உள்ளது. உலகக்கோப்பையில் பிரான்ûஸ கடைசியாக வென்ற தென் அமெரிக்க அணி ஆர்ஜென்டீனாவாகும். தகுதிச் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ் அணி சிறப்பாக விளையாடி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
அதே நேரத்தில் ஆர்ஜென்டீனாவோ வெளியேற்றப்படும் அபாயத்துடன் விளையாடி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணிகளுமே கோல் போடும் முனைப்பில் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தன.
இதில் 13-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் மாப்பேவை எதிரணி வீரர் மார்கோஸ் ரஜோ கீழே விழச்செய்தார். இதையடுத்து வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன் கோலாக்கினார். இதனால் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்ஜென்டீனா அணி தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 41-வது நிமிடத்தில் பனேகா கடத்தி அனுப்பிய பந்தை 35 அடி தூரத்தில் இருந்து அற்புதமான முறையில் கோலாக்கினார் முன்கள வீரர் ஏஞ்சல் டி மரியா.
இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 48-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அனுப்பிய பந்தை தற்காப்பு வீரர் கேப்ரியேல் மெர்காடோ கோலாக்கினார். இதனால் ஆர்ஜன்டீனா 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால் சிறிது நேரத்திலேயே 57-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹெர்ணான்டஸ் கடத்தி அனுப்பிய பந்தை தற்காப்பு வீரர் பெஞ்சமின் பவார்ட் கோலாக்கினார். இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.
மாப்பே 2 கோல்கள்: இதற்கிடையே பிரான்ஸின் இளம் வீரர் கிளியன் மாப்பே 64-ஆவது நிமிடத்தில் அதிரடியாக அடித்த கோலடித்தார். இதன் தொடர்ச்சியாக 68-ஆவது நிமிடத்தில் ஜிராட் அனுப்பிய பந்தை கோலாக்கினார் மாப்பே. இது அவரது இரண்டாவது கோலாகும். இதனால் 4-2 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
பதில் கோலடிக்க ஆர்ஜென்டீனா தீவிரமாக முயன்றதின் விளைவாக கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி அனுப்பிய பந்தை செர்சியோ அகியுரோ கோலாக்கினார். இது அந்த அணியின் 3-ஆவது கோலாகும்.
எனினும் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி பிரான்ஸ் ஆகும்.

1 லுகா மொட்ரிக் 
(குரோஷியா)
குரோஷிய அணிக்கு நடுக்களத்தில் அபாரமாக ஆடி வரும் அவர், எதிரணிகளையும் தனது ஆட்டத்தில் நிலைகுலையச் செய்துள்ளார். 2 கோல்கள் அடித்துள்ள அவர் மேலும் 
3 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். அரையிறுதி வரை குரோஷியா முன்னேறும் என கருதப்படும் நிலையில் மொட்ரிக் தங்கப் பந்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
2 ரொனால்டோ 
(போர்ச்சுகல்)
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தார். மேலும் மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கோலை அடித்தார். ஈரானுடன் நடந்த ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்டாலும், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். போர்ச்சுகல் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினால் தங்கப் பந்து ரொனால்டோ வசம் வரும்.
3 இஸ்கோ 
(ஸ்பெயின்)
ஸ்பெயினின் சிறந்த நடுக்கள வீரரான இஸ்கோ, தகுதிச் சுற்றில் தடுமாறிய போது இஸ்கோவின் பிரமாதமான ஆட்டம் உதவியது. ஒரு கோலடித்துள்ள அவர்,மேலும் 3 கோல்களை அடிக்க உதவினார். முன்கள வீரர்களுக்கு பக்கபலமாக உள்ள இஸ்கோவை களத்தில் எதிரணி வீரர்கள் தடுத்து நிறுத்துவது கடினமாகும். 
4 குட்டின்ஹோ 
(பிரேஸில்)
இந்த உலகக் கோப்பையில் சிறந்த நடுக்கள ஆட்டக்காரராக குட்டின்ஹோ உள்ளார். 2 கோல்களை அடித்துள்ள அவர் பிரேஸில் அணியின் வெற்றிக்கு சிறந்த துணையாக உள்ளார். ஸ்விட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் குட்டின்ஹோ திறன் வெளிப்பட்டது. பிரேஸிலின் தூண்போன்று உள்ள குட்டின்ஹோ, அந்த அணி இறுதி வரை முன்னேறினால் தங்கக் கால்பந்தை வெல்வார்.

தங்க கால்பந்து வெல்லப் போவது யார்?
உலகக் கோப்பை கால்பந்து 2018-இல் தங்கக் கால்பந்தை வெல்லப்போகும் வீரர் யார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஷியாவில் கடந்த 14-ஆம் தேதி முதல் உலகக் கோப்பை ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. முதல் தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. உலகக்கோப்பையில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு தங்கக் கால்பந்து பிஃபா சார்பில் தரப்படும். அவ்வகையில் சிறந்த நான்கு வீரர்களில் அதை வெல்லும் வாய்ப்பு யாருக்கு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com