டிஎன்பிஎல் போட்டியில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்

டிஎன்பிஎல் போட்டியில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்

வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டிஎன்பிஎல் நிர்வாகத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது...

வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டிஎன்பிஎல் நிர்வாகத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் டிஎன்பிஎல் 3-வது ஆண்டு போட்டிகளில் 16 வெளிமாநில வீரர்கள் கலந்து கொண்டு முதன்முறையாக விளையாடுவர் என அறிவிக்கப்பட்டது.  தில்லியைச் சேர்ந்த உன்முக்சந்த், ஆந்திர வீரர் ஹனுமா விகாரி, செளராஷ்டிரா விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் உள்பட 16 வெளிமாநில வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இவர்கள் விளையாடுவது பிசிசிஐ அனுமதிக்கு பின் நடைபெறும். 13 மாநில சங்கங்களைச் சேர்ந்த 112 வீரர்கள் இந்த பட்டியலில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணியும் 2 வெளிமாநில வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உள்ளூர் வீரர்களுக்கும் சிறந்த அனுபவம் கிடைக்கும். தங்கள் மாநில சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வர வேண்டும். 2018 ஐபிஎல் போட்டியில் எந்த அணியிலும் விளையாடதவராக இருக்க வேண்டும் என்று டின்பிஎல் இதுகுறித்து அறிவித்தது. 

ஆனால் உள்ளூர் டி20 போட்டிகளில் வெளிமாநில வீரர்களைச் சேர்க்கக் கூடாது என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுத்து பிசிசிஐயின் டி20 நிர்வாகக் குழு அனுப்பிய சுற்றறிக்கைக்குத் தடை விதித்தும் வெளிமாநில வீரர்களை டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரியும் டிஎன்பிஎல் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. டி20 நிர்வாகக் குழு அனுப்பிய சுற்றறிக்கைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், டிஎன்பிஎல் போட்டியில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து டிஎன்பிஎல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் மூன்றாவது கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் இன்றிரவு 7.15 மணிக்கு திருநெல்வேலி சங்கர் நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com