இது இந்திய அணியா, பிசிசிஐ அணியா?:  முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய தகவல் ஆணையம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது...
இது இந்திய அணியா, பிசிசிஐ அணியா?:  முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய தகவல் ஆணையம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது என்று மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர இயலுமா என்பது குறித்து பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2016 ஜூலையில் சட்ட ஆணையத்திடம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் வலியுறுத்தியது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் உறுப்பினர்களாக இருக்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியாவில் ஓர் அங்கமாக இருக்கும் பிசிசிஐ, வரி விலக்கு மற்றும் நில ஒதுக்கீடு ஆகிய வடிவங்களில் அரசிடம் இருந்து போதிய நிதியுதவிகளைப் பெறுகிறது. பிசிசிஐ, தனியாதிக்கச் செயல்பாட்டுடன் இருந்தாலும், பொது மக்கள் சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தன்னை ஒரு தனியார் அமைப்பாக காட்டிக் கொள்ளும் அதை, ஒரு பொதுத் துறையாகக் கருதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர இயலும். பிசிசிஐ, அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் வரிச் சலுகைகளை அனுபவித்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், 1997-2007 காலகட்டத்தில் ஏறத்தாழ ரூ.2,168.5 கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த 2007-08 காலகட்டத்தில், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 12ஏ-வின் கீழ் தொண்டு நிறுவனமாக பிசிசிஐ பதிவு செய்யப்பட்டிருந்தது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பிசிசிஐ, ஏறத்தாழ ஒரு தேசிய விளையாட்டு சம்மேளனம் போலவே செயல்படுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பது, அதன் தரத்தை உயர்த்துவது, அதுதொடர்பான கொள்கைகளை வகுப்பது, சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வது இவையே பிசிசிஐயின் சட்டவிதிகளின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களாகும். பிசிசிஐ, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 12-இன் படி, இந்திய அரசு சார்பான ஓர் அமைப்பாகவே கொள்ளப்பட வேண்டும். மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி, மத்திய அரசானது பிசிசிஐ-ஐ ஒரு தேசிய விளையாட்டுச் சம்மேளனமாகவே கருத்தில் கொண்டுள்ளது. அந்த வகையில், இதர விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும்போது, பிசிசிஐக்கு ஏன் விலக்களிக்கப்பட வேண்டும்? என்று சட்ட ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.

இந்நிலையில் மத்திய தகவல் ஆணையமும் இதே விவகாரத்தில் பிசிசிஐயிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பை ஏன் கொண்டுவரக்கூடாது என்று கேள்வியெழுப்பியதோடு இதற்கு விளக்கமும் அளிக்கும்படி பிசிசிஐ மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. 

எதன் அடிப்படையில் பிசிசிஐயும் அதன் வீரர்களும் இந்தியா சார்பாக விளையாடுகிறார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கீதா ராணி என்பவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து இந்தக் கேள்வி, மத்திய தகவல் ஆணையத்திடம் சென்றது.

பிசிசிஐ அமைப்பால் தேர்வு செய்யப்படும் வீரர்கள் பிசிசிஐ அமைப்புக்காக விளையாடுகிறார்களா அல்லது நாட்டுக்காக விளையாடுகிறார்களா, சர்வதேச அளவில் விளையாடவுள்ள வீரர்களை எதன் அடிப்படையில் தனியார் அமைப்பு தேர்வு செய்கிறது, பிசிசிஐக்கு அதிகாரம் வழங்கியுள்ளதால் அரசுக்கு இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன போன்ற 12 கேள்விகளை கீதா ராணி ஆர்டிஐ மூலமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். 

பிசிசிஐ,  தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் இல்லாததால் தங்களிடம் எவ்வித தகவலும் இல்லை என்று இதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.  இதனால் இந்த மனு பிசிசிஐக்கும் அனுப்பப்படவில்லை. 

எனினும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீதர் ஆச்சர்யலு இதுபற்றிக் கூறும்போது, அவருடைய கேள்வி இது இந்திய அணியா அல்லது பிசிசிஐ அணியா என்பதுதான். எதன் அடிப்படையில் இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்கிறது என்கிற கேள்வியை இதன்மூலம் முன்வைக்கிறார். இதுதொடர்பான நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு தகவல் ஆணையத்துக்கு உள்ளது. சட்ட ஆணையம் பரிந்துரை செய்தபிறகும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்குப் பல சந்தேகங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பிசிசிஐ அமைப்பை ஏன் பொதுத்துறையாக கருதக்கூடாது என்று கேள்வியெழுப்பி அதற்கு விளக்கம் அளிக்க பிசிசிஐக்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com