பிரான்ஸ் உலகக் கோப்பை வெற்றியில் குடியேறிய சமூகத்தினர் அபார பங்களிப்பு 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அந்நாட்டில் குடியேறியவர்களின் பங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அந்நாட்டில் குடியேறியவர்களின் பங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்துக்காகவும், நல்ல வாழ்க்கை தரத்துக்காகவும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவது வழக்கம். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரியா, இத்தாலி உள்பட பல்வேறு நாடுகளில் குடியேறியவர்கள் அதிகம் உள்ளனர்.
குறிப்பாக குடியேறியவர் குடும்பத்தினர் அந்தந்த நாடுகளிலேயே பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் அவர்களது குழந்தைகள் கால்பந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்று ஐரோப்பிய லீக் போட்டியில் பல்வேறு பிரபலமான கிளப் அணிகளில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
பிரான்ஸ் அணியில் குறிப்பாக நட்சத்திர வீரர்களாகன கிரைஸ்மேன், போக்பா, மாப்பே ஆகியோர் குடியேறியவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கிரைஸ்மேன் தந்தை ஜெர்மனியில் இருந்தும், தாயார் போர்ச்சுகல் நாட்டில் இருந்தும் குடியேறினார். பால் போக்பாவின் பெற்றோர் கினியா நாட்டில் இருந்து குடியேறியவர்கள். கிளியன் மாப்பேவின் தந்தை கேமரூன் நாட்டில் இருந்தும், தாயார் அல்ஜீரியாவில் இருந்தும் வந்து பிரான்ஸில் குடியேறினர்.
பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை வெற்றியில் இந்த நட்சத்திர வீரர்களின் பங்கு அபாரமானதாகும். பல ஆண்டுகளாக பிரான்ஸ் சமூகத்தில் உள்ளூர் மக்கள், குடியேறியவர்கள் என ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர்.
பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஆட்டத்தில் கிரைஸ்மேன் ப்ரீ கிக் மூலம் அடித்த பந்தில் குரோஷிய வீரர் மண்ட்ஸுகிக் சேம் சைட் கோலடித்தார். பின்னர் பெனால்டி வாய்ப்பு மூலம் கிரைஸ்மேன் கோலடித்தார். பின்னர் போக்பா, மாப்பே ஆகியோர் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 
அதே போல் மற்றொரு மீட்பீல்டரான பிளேயிஸ் மட்டெளடி பெற்றோர் அங்கோலா மற்றும் காங்கோவில் இருந்து வந்து குடியேறினர். கடந்த 1998-இல் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஜினடின் ஜினடேன் பெற்றோர் அல்ஜீரியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கிரைஸ்மேன் கூறுகையில்-
நாங்கள் வெவ்வேறு பகுதிகள் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், பிரான்ஸ் என்ற நாட்டைச் சேர்ந்தவர்கள். ஓரே சீருடை அணிந்து நாட்டுக்காக எதையும் செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்றார்.

அன்றைய தோல்வியும், இன்றைய வெற்றியும்
பேரரசர் நெப்போலியன் தலைமையில் பெரும்படை ரஷியாவை கைப்பற்ற படையெடுத்துச் சென்று படுதோல்வியுடன் அன்று திரும்பியது. தற்போது அதே ரஷியாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு சென்ற பிரான்ஸ் விளையாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூடி திரும்பியுள்ளனர்.
கடந்த 1812-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி 6 லட்சம் வீரர்கள் அடங்கிய படையுடன் நெப்போலியன் ரஷிய எல்லைக்குள் நுழைந்தார். ஆனால் ரஷிய வீரர்கள் போரிடாமல் பின்வாங்கிச் சென்றனர். செப்டம்பர் 14-இல் தலைநகர் மாஸ்கோவுக்குள் நெப்போலியன் படை நுழைந்து தீக்கிரையாக்கியது. ஆனால் அங்கு நிலவிய கடும் குளிரை சமாளிக்க முடியாமலும், ரஷிய படைகள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமலும் பிரான்ஸ் படையினர் தோல்வியடைந்து திரும்பிச் சென்றனர்.
இச்சம்பவம் நடைபெற்று 196 ஆண்டுகள் கழித்து தற்போது ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்று பிரான்ஸ் வீரர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு இனிமையான நினைவுகளுடன் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com