சுடச்சுட

  

  போர், குண்டு சப்தம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்டில் விளையாடும் ஆப்கானிஸ்தான்

  By பா.சுஜித்குமார்  |   Published on : 13th June 2018 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  player

  14-இல் பெங்களுருவில் இந்தியாவுடன் மோதல்

  தொடர் உள்நாட்டு போர், துப்பாக்கிச் சூடு, குண்டு சத்தம், உயிரிழப்புகள் மத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்.

  பண்டைய காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் விளங்கிய நிலையில் காலப்போக்கில் அது சுதந்திர நாடாகியது. ஆங்கிலேயர்கள் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட் கடந்த 19-ஆம் நூற்றாண்டு மத்தியிலேயே ஆப்கனில் விளையாடப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளில் கிரிக்கெட் மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தொடர் உள்நாட்டுப் போர், துப்பாக்கி, குண்டு சத்தம் உயிரிழப்புகள் நீடித்து வந்ததால் ஆப்கனில் விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது கானல் நீராவாகவே உள்ளது.

  தலிபான் ஆட்சிக் காலத்தில் விளையாட்டு மேலும் பாதிப்புக்கு ஆளானது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கால்பந்து, கிரிக்கெட் போன்றவை ஓரளவுக்கு தழைக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 1995-இலேயே ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டது. 2001-இல் ஐசிசி, 2003-இல் ஏசிசி இணைப்பு உறுப்பினராக ஆப்கானிஸ்தான் நியமிக்கப்பட்டது.

  மேலும் டி 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலிலும் ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளது. மேலும் கடந்த 2017-இல் முழு உறுப்பினர் (டெஸ்ட் அந்தஸ்து) வழங்கி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. 12-வது டெஸ்ட் விளையாடும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறி உள்ளது.

  டி 20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவு சாதித்து வரும் நிலையில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.
  அயர்லாந்தும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில் ஆப்கனுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ முன்வந்தது. இரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக தோழமையுடன் உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது.

  இந்நிலையில் வரும் 14-ஆம் தேதி பெங்களூருவில் வரலாற்று சிறப்பு மிக்க இந்தோ-ஆப்கன் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதன் மூலம் அந்நாட்டு வீர்ரகளின் நீண்ட நாள் கனவு நனவாகிறது.

  ஆல் ரவுண்டர் ரஷீத்கான்:
  ஆப்கானிஸ்தானில் பல்வேறு வீரர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகின்றனர். அஷ்கர் ஷானிக்சாய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதே நிறைந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், அண்மையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டிகளில் ஹைதராபாத் அணி சார்பில் சிறப்பாக விளையாடினார். தனது அணியை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் செல்ல உதவினார்.

  மேலும் முஜிப்பூர் ரஹ்மான், ஸாகிர் கான், ஹம்சா ஹோடக் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆப்கன் சுழற்பந்து வீச்சை இந்தியா எதிர்கொள்ளுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

  கேப்டன் விராட்கோலி கழுத்து காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அதே போல் ரித்திமன் சாஹாவும் காயம் அடைந்துள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. வரும் 14 முதல் 18-ஆம் தேதி வரை டெஸ்ட் போட்டி நடக்கிறது. 

  வங்கதேசம் வொயிட்வாஷ்
  இதற்கிடையே இந்தியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கன் அணி இந்தியாவில் கிரேட்டர் நொய்டா, டேராடூனை தங்கள் மைதானமாக கொண்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக டேராடூனில் கடந்த வாரம் நடைபெற்ற 3 டி 20 போட்டிகளிலும் ஆப்கன் அணி வென்று வொயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. டி 20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆப்கன் வீரர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இரு அணிகளும் பெங்களரூவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 14 முதல் 18-ஆம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் இந்திய-ஆப்கன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் டிலும் அனைத்து முன்னணி நாடுகளுக்கும் ஆப்கன் சவாலாக விளங்கும் எனத் தெரிகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai