Enable Javscript for better performance
கண்ணீர் சிந்திய ஸ்மித்துக்கு பெருகிவருகிறது ஆதரவு- Dinamani

சுடச்சுட

  
  smith

  பந்தை சேதப்படுத்த முயன்றதற்காக ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க அண்மையில் பேட்டியளித்தார். அது அவருக்கு பல்வேறு தரப்புகளில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.
  அவர் கண்ணீர் மல்க அளித்த பேட்டியைத் தொடர்ந்து, மனம் உருகிய ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லேமன், தானும் ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டம் முடிவடைந்த பிறகு, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார்.
  இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் ஸ்மித்துக்கும், அவரது சகாக்களுக்கும் பரவலாக ஆதரவு பெருகி வருகிறது.
  'அவர்கள் பந்தை தானே சேதப்படுத்த முயன்றார்கள். அது ஒன்றும் கொலைக் குற்றத்துக்கு சமமானது இல்லையே' என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனைச் சேர்ந்த 'தி டைம்ஸ்' செய்தித்தாளில் 'அன்புக்குரிய ஆஸ்திரேலியா, இது போதுமானது' என்று தலைப்பிட்டு ஸ்மித் விவகாரம் தொடர்பான செய்தியைப் பிரசுரித்துள்ளது. 
  ஆஸ்திரேலிய அணின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே 'தி டெய்லி டெலிகிராஃப்' பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
  அதில், 'பந்தை சேதப்படுத்த நடைபெற்ற முயற்சி எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. எங்களுக்கும் கோபம் உள்ளது. ஆனால், எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை. அவர்கள் செய்த குற்றத்துக்கு அதிகமாகவே தண்டனை அளிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
  'வீரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கமும் இந்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
  அதேநேரம், இந்த வீரர்களின் செயலால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்துக்கு சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. மெக்கெல்லன் நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை 3 ஆண்டுகளிலிருந்து வெறும் 7 மாதங்களாக குறைத்து கொண்டு விட்டது.
  ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஜூன் மாதம் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஒரு நாள் மற்றும் டி20 அணிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் அணிக்கு லேமனுக்கு பிறகு, முன்னாள் டெஸ்ட் வீரர் ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  '2016-இல் ஸ்மித்தும், வார்னரும் நடுவரால் எச்சரிக்கப்பட்டனர்'
  பந்தை சேதப்படுத்தப்படுத்த முயன்றதற்காக தண்டனைக்குள்ளாகியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இதே குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
  ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது.
  இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
  அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த வியாழக்கிழமை தாய்நாடு திரும்பிய மூன்று வீரர்களும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்தனர்.
  இந்தச் சூழலில் 2016-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் ஸ்மித்தும், வார்னரும் பந்தை சேதப்படுத்த முயன்றதாக நடுவரால் எச்சரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
  அந்நாட்டில் இருந்து வெளிவரும் 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகையில் இந்தச் செய்தி வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  டேரில் ஹார்பர் என்ற நடுவர் கிரிக்கெட் ஆஸ்திரேலிய தேர்வுக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  விக்டோரியா அணிக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் அணியில் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் இடம்பெற்றிருந்தனர். அந்த ஆட்டம் 2016-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் அவர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றனர். அவர்களை நான் அப்போது எச்சரித்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர் புகழ்பெற்ற வீரர் என்பதால் இந்த விவகாரம் பெரிதாக்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் ஸ்மித் அணி தோல்வியைச் சந்தித்தது. ஆனால், 'சிட்னி மைதானம் சரியில்லை. நான் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவவதில் மகிழ்ச்சி அடையவில்லை' என்றார் ஸ்மித் புகார் தெரிவித்தார்.
  அந்த சமயத்தில்தான் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டு வந்தார் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai