அருமையான பந்துவீச்சால் 2-ம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து!

2-ம் நாளின் முடிவில் நியூஸிலாந்து, 74.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது... 
அருமையான பந்துவீச்சால் 2-ம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் தொடங்கி, கடந்த 10-ஆம் தேதி முடிந்த 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. கடந்த 22-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்து வீசத் தீர்மானித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் 154 பந்துகளில் 97 ரன்களுடனும் பந்துவீச்சாளர் ஜாக் லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். 

இன்று விளையாடிய இங்கிலாந்து அணி, 96.5 ஓவர்களில் 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சதத்தைப் பூர்த்தி செய்த பேர்ஸ்டோவ், 101 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நியுஸிலாந்துத் தரப்பில் செளதி 6 விக்கெட்டுகளும் போல்ட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறியது. குறிப்பாக, பிராட் ஆக்ரோஷமாகப் பந்துவீசி எதிரணியை நிலைகுலையச் செய்தார். இதனால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்கிற மோசமான நிலையை அடைந்தது நியூஸிலாந்து. லதம், நிகோல்ஸ் ரன் எதுவுமின்றி வெளியேறினார்கள். ஆறாவதாகக் களமிறங்கிய விக்கெட் கீப்பர் வாட்லிங்கும் கிராண்ட்ஹோமும் நிதானமாக விளையாடினாலும் மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். நன்கு விளையாடி வந்த கிராண்ட்ஹோம், நாளின் இறுதிக்கட்டத்தில் 72 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

2-ம் நாளின் முடிவில் நியூஸிலாந்து, 74.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. வாட்லிங் 77 ரன்களுடனும் செளதி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்துத் தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். இன்னமும் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தொட நியூஸிலாந்துக்கு 115 ரன்கள் தேவைப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com