துளிகள்...

துளிகள்...


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி அணிகள் பிரிவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. பேட்ஸ்மேன்களில் கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய டி20 அணியில் ரிஷப் பந்த் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே தோனியே வரும் தொடரில் விளையாடுவதற்கு முன்வரவில்லை. எனினும் அவர் இந்திய ஒரு நாள் அணியின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருப்பார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் ஆட்டங்களில் முழு கவனம் செலுத்துவதற்காக சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் மூத்த வீரர் அஸார் அலி அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற வகையில் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புரோ கபடி லீகின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாட்னா பைரேட்ஸ் 29-27 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை போராடி வீழ்த்தியது. முதல் பாதியில் பாட்னா அணி 15-12 என முன்னிலை பெற்றிருந்தது.

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 சேலஞ்சர் கோப்பைக்கான இந்திய புளு, இந்திய ரெட், கிரீன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குண்டூரில் வரும் 12 முதல் 16-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் மூன்று வீரர்கள் மீதான நீண்ட தடை, மூத்த அதிகாரிகள் விலகல் ஆகியவற்றால் ஏற்பட்ட தொடர் அழுத்தம் காரணமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) தலைவர் டேவிட் பீவர் வியாழக்கிழமை பதவியை விட்டு விலகினார்.

மாஃபியா கும்பலோடு தொடர்பு இருந்ததாகக் கூறி இத்தாலியின் உலகக் கோப்பை வென்ற அணி வீரர் வின்சென்úஸா லேகுயின்டாவுக்கு இரண்டு ஆண்டுகளும், தந்தை ஜியுசெப்பேக்கு 19 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐ முன்னாள் சிஇஓ ராகுல் ஜோரி மீதான பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாக சுயேச்சையான விசாரணை குழுவிடம் தேவையான ஆவணங்களை பிசிசிஐ வழங்கியது. புதிதாக புகார்களை செய்ய வரும் நவம்பர் 9-ஆம் தேதி இறுதி நாளாக விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

ஐ-லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஷில்லாங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல்கணக்கில் ஷில்லாங் லேஜாங் அணியை வீழ்த்தியது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியின் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தின் தொடக்க நாளான வியாழக்கிழமை மத்தியப் பிரதேசம் 214/3 ரன்களை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com